மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகனும், அம்மாநில அமைச்சருமான ஆதித்யா தாக்கரேவின் நெருங்கிய நபரின் வீடுகளில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் தொடக்கத்தில் இருந்தே முட்டல் மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில் இன்று, மும்பையில் உள்ள சிவசேனா கட்சி பிரமுகர்
ராகுல் கனல்
வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இவர், ஷீரடி அறக்கட்டளை உறுப்பினர் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகனும், அம்மாநில அமைச்சருமான ஆதித்யா தாக்கரேவுக்கு நெருங்கிய நபர். பி.எம்.சி. நிலைக்குழு தலைவர் யஷ்வந்த் ஜாதவ் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
சிவசேனா பிரமுகர் ராகுல் கனல் வீட்டில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனைக்கு, மகாராஷ்டிர மாநில அமைச்சர்
ஆதித்யா தாக்கரே
கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
மகாராஷ்டிரா
மீது இது போன்ற தாக்குதல்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. இப்போதும் நடக்கின்றன. கடந்த காலங்களில் மத்திய அமைப்புகள் இப்படி தவறாகப் பயன்படுத்தப்பட்டன. இது மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் நடந்தது. பாஜகவின் பிரசார பீரங்கிகளாக மத்திய அமைப்புகள் மாறிவிட்டன. ஆனால் நாங்கள் தலைவணங்க மாட்டோம், மகாராஷ்டிரா தலைகுனியாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.