பனாஜி: கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகக்கூடும் என்ற தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளதால் கடந்தமுறையை போன்று பாஜகவிடம் ‘கோட்டை’ விட்டு விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
கோவா சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகவும் தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆளும் பாஜகவும் காங்கிரஸும் சமமான இடங்களை பெறக்கூடும்.
எனினும் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்படக்கூடும் என்றுதெரிகிறது. அதேநேரம் இதர கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிகிறது.
டைம்ஸ் நவ்-வீட்டோ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக 14, காங்கிரஸ் 16, இதர கட்சிகள் 10 என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத சூழலில் இதர கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க அக்கட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.
பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் கோவாவில் தொங்கு சட்டப்பேரவையே ஏற்படும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பால் ஆட்சியமைக்கும் நடவடிக்கையை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது.
இதையடுத்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். வியாழன் அன்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் இந்த பயணம் முக்கியமாக கருதப்படுகிறது.
இதுபோலவே காங்கிரஸ் கட்சியும் அங்கு ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற பிறகும் ஆட்சி அமைக்க முடியாமல் போன 2017-ம் ஆண்டு போன்ற சூழலை தவிர்க்க காங்கிரஸ் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
இதன் ஒருபகுதியாக நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் பாதுகாக்கும் பொருட்டு வடக்கு கோவாவில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் நடந்ததுபோன்ற கட்சித் தாவல் ஏற்படாமல் தடுக்க இந்த நடவடிக்கையை காங்கிரஸ் தலைமை எடுத்துள்ளது. அவர்கள் அனைவரும் வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகும் வரை அங்கு தங்கியிருப்பார்கள் எனத் தெரிகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் கோவா பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவ் இதுபற்றி கூறுகையில் ‘‘எங்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க முடிவு செய்துள்ளோம். சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளோம். பேச்சுவார்த்தை நடத்த ப.சிதம்பரம் மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோரை கட்சித் தலைமை நியமித்துள்ளது.
கோவாவில் பாஜகவுக்கு எதிராகப் போராடிய அனைத்துக் கட்சிகளுடனும் நாங்கள் கூட்டணிக்கு தயாராக இருக்கிறோம். திரிணமூல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம். கோவாவில் பாஜகவுக்கு எதிரான எவருடனும் கூட்டணிக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். கோவாவில் பல அரசியல் கட்சிகள் உள்ளன. எம்ஜிபி, திரிணமூல், ஆம் ஆத்மி என பல கட்சிகளும் எங்களுக்கு ஆதரவாக இருக்கும். எங்கள் எண்ணிக்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம், நாங்கள் ஆட்சி அமைப்போம். முடிவுகள் வெளியான பிறகு எங்கள் நடவடிக்கை தெரியும்’’ என்றார்.
இதுமட்டுமின்றி பாஜகவை போலவே காங்கிரஸும் களமிறங்கியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர்களுடனும் காங்கிரஸ் தொடர்பில் உள்ளது.
பாஜக அல்லாத கூட்டணி அரசு அமைய காங்கிரஸுடன் ஒத்துழைக்க ஆம் ஆத்மி ஆர்வம் காட்டி வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அமித் பலேகர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ‘‘காங்கிரஸைச் சேர்ந்த சிலர் எங்களைத் தொடர்பு கொண்டனர். பாஜக அல்லாத எந்த கூட்டணிக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். எந்த சூழ்நிலையிலும் பாஜகவை ஆதரிக்க மாட்டோம்’’ என்று பாலேகர் கூறினார்.