லண்டன்:லண்டன் மாளிகையின் உரிமையை விஜய் மல்லையாவின் நிறுவனம் வைத்திருக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
வங்கியில், 9,000 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் தலைமறைவான தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போது ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்த சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் சுவிட்சர்லாந்தின், யு.பி.எஸ்., வங்கி, 25 கோடி ரூபாய் கடன் நிலுவை தொடர்பாக விஜய் மல்லையாவின் லண்டன் வீட்டை விற்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து விஜய் மல்லையாவுக்கு சொந்தமான, ‘ரோஸ் கேப்பிடல் வென்ச்சர்ஸ்’ நிறுவனம், இதர சொத்துக்களை விற்று, கடனை திரும்ப செலுத்துவதாக தெரிவித்தது. இதை ஏற்க யு.பி.எஸ்., வங்கி மறுத்து விட்டது. ‘வங்கி கடனுக்காக விஜய் மல்லையாவின் பல சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சொத்துக்களை விற்பனை செய்து கடனை திரும்பத் தருவது, சர்வதேச சொத்து முடக்க உத்தரவுக்கு எதிரானது’ என, யு.பி.எஸ்., வங்கி கூறியது.
இதைத் தொடர்ந்து கடனை கட்டுவதற்காக, விஜய் மல்லையாவின் இதர சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி கோரி, ரோஸ் கேப்பிடல் வென்ச்சர்ஸ், லண்டன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம், ‘இதர சொத்து விற்பனை என்பது, சர்வதேச சொத்து முடக்க உத்தரவுக்கு பொருந்தாது’ என தீர்ப்பு அளித்தது. அத்துடன் லண்டன் மாளிகை உரிமத்தை விஜய் மல்லையா குடும்பம் வைத்திருக்கவும் அனுமதி அளித்துள்ளது.
Advertisement