புதுடெல்லி: மாநிலங்களவையில் காலியாகும் 13 இடங்களுக்கு வரும் 31-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. பஞ்சாப் மாநிலத்தில் மாநிலங்களவையின் 5 இடங்களும் கேரளாவில் 3, அசாமில் 2, இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா 1 என 6 மாநிலங்களில் உள்ள 13 மாநிலங்களவை இடங்கள் காலியாகிறது. இந்த இடங்களுக்கு வரும் 31-ம் தேதி தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர்களான ஆனந்த் சர்மா, ஏ.கே.அந்தோணி, பிரதாப் சிங் பஜ்வா, பஞ்சாப் மாநிலம் சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த நரேஷ் குஜ்ரால் உள்ளிட்டோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் விரைவில் முடிகிறது. இதையடுத்து, அந்த இடங்களுக்கு தேர்தல்கள் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. வேட்புமனு தாக்கல் 14-ம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய மார்ச் 21 கடைசிநாள். மனுக்களை வாபஸ் பெற 24-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. -பிடிஐ