கீவ்: உக்ரைனில் இதுவரை 202 பள்ளிகள், 34 மருத்துவமனைகள், 1500 குடியிருப்புகளை ரஷ்ய ராணுவம் சேதப்படுத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதனை உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கியும், அவரது ஆலோசகர் மிக்காலியோ போடோலியாக்கும் கூட்டாக அறிவித்தனர். உக்ரைனில் 900 குடியிருப்புகள் முழுமையாக தண்ணீர், மின்சாரம், ஹீட்டர்கள் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
மிக்காலியோ தனது ட்விட்டரில், “21-ஆம் நூற்றாண்டின் காட்டுமிராண்டித்தனம் இது. ரஷ்ய தாக்குதலால் 202 பள்ளிகள், 34 மருத்துவமனைகள், 1500 குடியிருப்புகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. 900 குடியிருப்புகள் முழுமையாக தண்ணீர், மின்சாரம், ஹீட்டர்கள் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளன. ரஷ்ய ராணுவத்திற்கு எதிரி நாட்டு ராணுவத்துடன் சண்டையிடத் தெரியாது. பொதுமக்களை கொல்ல மட்டுமே அவர்களுக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை இன்று 13-வது நாளாக தொடர்கிறது. கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் எனப் பல நகரங்களிலும் சிக்கியுள்ள மக்கள் உயிர் பிழைக்கவாவது எங்காவது தப்பிவிட மாட்டோமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
ரஷ்யா எச்சரிக்கை: உலக நாடுகள் அனைத்தும் வலியுறுத்தியும் கூட ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைன், ரஷ்யா மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.
இதற்கிடையில், உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளையும் விதித்துள்ளன. இதைக் குறிப்பிட்டு ரஷ்யா, ’எங்களிடமிருந்து எண்ணெய் இறக்குமதி நிறுத்தினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 300 டாலர் வரை கூட அதிகரிக்கலாம். மேலும், எங்கள் மீதான தடைகளை நீட்டித்தால் ஜெர்மனிக்கான கேஸ் பைப்லைனை மூடிவிடுவோம்’ என்று எச்சரித்துள்ளது.