பாஜகவின் விவசாய அணி மணிலா தலைவர் ஜி கே நாகராஜ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல்கொள்முதல் நிலையங்களில் தமிழக அரசின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினாலும், நிர்வாக திறமையின்மையின் காரணத்தினாலும் விவசாயிகளின் இலட்சக்கணக்கான நெல்மூட்டைகள் கடந்த 15 நாட்களாக கேட்பாரின்றி கிடக்கின்றன.
ஆங்காங்கே பெய்த மழையால் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் வீணாகும் நிலையில் உள்ளன. மேலும் திமுகவின் நிர்வாகிகள் நெல்கொள்முதல் நிலையங்களை கைப்பற்றி, ஒரு மூட்டைக்கு ரூ.60 என கட்டாய வசூலில் ஈடுபடுகின்றார்கள்.
விவசாயிகளின் நிலைமை திமுக அரசால் கவலைக்கிடமாக மாறியுள்ளது. ஏறக்குறைய 20 இலட்சம் விவசாயிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு நெல்கொள்முதலுக்கு முழுமையாக நிதி வழங்கியும், மாநில அரசின் மெத்தனத்தால் விவசாயிகளின் பரிதாபநிலை கருதி, மேதகு தமிழக ஆளுநரை சந்தித்து, முறையிட தமிழக பாஜக விவசாய அணி சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நெல்கொள்முதல் குளறுபடிகளை பலமுறை சுட்டிக்காட்டியும், அரசு தொடர்ந்து மெத்தனமாக இருப்பதால் அடுத்தகட்டமாக விவசாயிகளை ஒன்று திரட்டி தமிழக பாஜக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது”
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி கே நாகராஜ் தெரிவித்துள்ளார்.