பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என்று பிமார்க் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஆத்மி கட்சி பிரமாதமான வெற்றியைப் பெறும் என்றும் அது கணித்துள்ளது.
பஞ்சாப் சட்டசபையில் மொத்தம் 117 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு பிப்ரவரி 20ம்தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம், பஞ்சாப் லோக் காங்கிரஸ், பாஜக ஆகியவை முக்கியக் கட்சிகளாக போட்டியிட்டன.
இத்தனை பேர் போட்டியிட்டாலும் கூட காங்கிரஸுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையேதான் முக்கியப் போட்டி நிலவியது. இந்த நிலையில் 5 மாநிலசட்டசபைகளுக்கு கடைசிக் கட்டத் தேர்தல் இன்று நடந்தது. இதையடுத்து மாலை 6 மணிக்கு மேல் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டன.
இதில் பஞ்சாப் சட்டசபையை யார் பிடிப்பது என்ற கருத்துக் கணிப்பு முடிவை வெளியிட்டது. அதில் ஆளும் காங்கிரஸுக்கு 23 முதல் 31 இடங்களே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அனைவரும் எதிர்பார்த்தது போல ஆம் ஆத்மிக்கு 62 முதல் 70 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சிரோமணி அகாலிதளம் கட்சிக்கு 16 முதல் 24 இடங்கள் வரை கிடைக்கலாம்.
பாஜகவுக்கு 1 சீட் கிடைக்கலாம் அல்லது அதிகபட்சம் 3 சீட் வரை கிடைக்கலாமாம். பிற கட்சிகளும் 1 முதல் 3 சீட் வரை கைப்பற்றக் கூடும்.
2017ல் பஞ்சாப் சட்டசபைக்கு நடந்த தேர்தலின்போது வெளியான அனைத்து எக்ஸிட் போல்களும் தவறாக போயின. எந்த கருத்துக் கணிப்பு முடிவும், நிஜமான முடிவுடன் ஒத்துப் போகவில்லை. பஞ்சாப் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் ஆம் ஆத்மி 20 இடங்களைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது நினைவிருக்கலாம். ஆனால் தற்போது அது ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது முக்கியமானது.