உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷிய படைகள் கைப்பற்றின. இந்தநிலையில் அணு மின் நிலைய ஊழியர்களை ரஷிய படையினர் சித்ரவதை செய்ததாக உக்ரைன் எரிசக்தி துறை அமைச்சர் ஹர்மன் ஹலுஷ்சென்கோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“அணுமின்நிலைய ஊழியர்களை ரஷிய படையினர் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சித்ரவதை செய்தனர். அந்த அணுமின் நிலையத்துக்குள் 500 ரஷிய வீரர்கள் மற்றும் 50 யூனிட் ஆயுதங்கள் உள்ளன. அமைச்சகத்துக்கு கிடைத்த தகவலின்படி ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் அணு மின் நிலைய நிர்வாகத்தை தவறான பிரசார நோக்கங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.
ரஷியா அதன் குற்றங்களை நியாயப்படுத்தும் முயற்சியில் அவர்களது குடிமக்கள் மற்றும் சர்வதேச சமூகத்துக்காக ஒரு போலியான நோக்கத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. அணு மின் நிலையத்தில் ரஷிய துருப்புகள் ஆயுதத்தினால் தாக்கினால் அது ஒட்டு மொத்த ஐரோப்பியாவிற்கும் பேரழிவை ஏற்படுத்தும். அப்படிஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பை ரஷியாதான் ஏற்க வேண்டும்.
ரஷியாவின் அணு ஆயுத தீவிரவாதத்தை நாம் ஒன்றாக இணைந்து நிறுத்த வேண்டும். அதை கண்டிப்பாக இப்போதே செய்ய வேண்டும். தாமதப்படுத்த கூடாது” என்றார்.