மாஸ்கோ: உக்ரைன் மீதான தாக்குதல் 13வது நாளாக நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் தலைநகர் கீவ் மற்றும் பல நகரங்களில் சுற்றி வரும் ரஷ்ய ராணுவ வாகனங்களில், ‘இசட்'(Z) என்ற சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த சின்னமானது சமூக வலைதளங்களில் பொதுவாக காணப்பட்டாலும், குறிப்பாக ரஷ்யாவை ஆதரிப்பவர்கள் இந்த சின்னம் பொறிக்கப்பட்ட ‘டீஷர்ட்’களை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
‘இசட்’ சின்னத்தின் விளக்கம்
ரஷ்ய ராணுவ வாகனங்களில் பொறிக்கப்பட்டுள்ள ‘இசட்’ என்ற சின்னத்திற்கு இரண்டு விதமான விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.
1. ‘ஜாபோபெடி(za pobedy)’- என்பதற்கு வெற்றி என்றும்
2. ‘ஜாபேட்( Za pad)’ என்பதற்கு மேற்கு எனவும் விளக்கம் கொடுக்கப்படுகிறது.
முக்கியத்துவம்
* ரஷ்ய வாகனங்களை அடையாளம் கண்டுகொண்டு கொள்ளவும் மற்றும் தவறுதலாக துப்பாக்கிச்சூடு நடத்துவதை தவிர்க்கவும்
* வாகனங்களின் இருப்பிடத்தை தொடர்பு கொள்ளவும்
* ரஷ்யாவின் அடையாளம் மற்றும் சித்தாந்தத்தை அமல்படுத்தவும் இந்த ‘இசட் ‘ சின்னம் ரஷ்ய வாகனங்களில் பொறிக்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதற்கான உண்மையான விளக்கத்தை ரஷ்ய படைகள் கூறவில்லை.
முதலில்…
இந்த சின்னம் முதன் முதலில், ரஷ்ய படைகள் கடந்த பிப்.,22ல் உக்ரைனின் டோநெட்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்த போது காணப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், கடந்த 2014ல் கிரிமீயா பகுதி, ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட போதே இந்த எழுத்தை ராணுவ வாகனங்களில் காணப்பட்டன என தெரிவிக்கின்றனர்.
பயன்படுத்துபவர்கள்
* ரஷ்ய ராணுவ வாகனங்கள்
* ரஷ்யாவை ஆதரிப்பவர்கள்
* ரஷ்யாவிற்கு ஆதரவான வலதுசாரி போராட்டக்காரர்கள்
* ரஷ்யாவை சேர்ந்த ஜிம்னாஸ்ட் இவான் குலியக்
* ரஷ்யாவின் உளவாளி மரியா புடினா ஆகியோர் இந்த சின்னத்தை பயன்படுத்தி உள்ளனர்.
‘நாசி’ அமைப்பு சின்னத்துடன் தொடர்பு?
நாசிக்களின் சின்னத்துடன் இந்த ‘இசட்’ சின்னம் ஒத்து போவதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ரெஜ்னிகோவ் குற்றம்சாட்டி உள்ளார். கடந்த 1943 க்கு முன்னர், பல்லாயிரகணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடம் அருகே ‘இசட்’ ஸ்டேசன் இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
மற்ற சின்னங்கள்
இந்த ‘இசட்’ சின்னத்தை தவிர்த்து, உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய வாகனங்களில் கீழ்கண்ட சின்னங்கள் காணப்படுகின்றன.
*இரண்டு கோடுகளுக்கு நடுவே முக்கோணம்
*மூன்று புள்ளிகள் அடங்கிய ஒரு வட்டம்
* ஒரு பெரிய முக்கோணத்திற்குள் சிறிய முக்கோணம் கொண்ட சின்னங்கள் ரஷ்ய ராணுவ வாகனங்களில் காணப்படுகின்றன.