சென்னை: இந்தியாவிலேயே அதிகமாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2,631 மாற்றுத் திறனாளிகள் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 81 பட்டப் படிப்புகள், 21 திறன் மேம்பாட்டுப் படிப்புகள் ஆகிய 130 கல்விசார் பாடவகைப் பிரிவுகளைத் தொலைதூரக் கல்விஅடிப்படையில் வழங்கி வருகிறது. இதில்50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். அதன்படி, பல்கலைக்கழகத்தில் 2003-ம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பல்வேறு படிப்பு களைப் படித்து வருகின்றனர்.
இதற்கிடையே, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று நலச் சங்கங்கள் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
கல்விக் கட்டணத்தில் முழு விலக்கு
அதைத்தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குக் கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்களித்து தமிழக அரசு 2008-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. பின்னர், உயர்கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்புக்கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளித்து 2010-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், மாநில பல்கலைக்கழகங்களில் திறந்தநிலை பல்கலை.யில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் அதிகமானோர் பட்டம் பெற்றுள்ளது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு வழங்கிய புள்ளி விவரங்களின்படி இளநிலை பிரிவில் 1,840 மாற்றுத் திறனாளிகளும், முதுநிலையில் 791 பேர், 2 பேர் எம்ஃபில், 4 பேர் பிஎச்.டி என மொத்தம் 2,637 பேர் பட்டம்பெற்றுள்ளனர். 71 வகையான இளநிலை பட்டப்படிப்பில் வரலாறு பிரிவில் 192 பேரும்,பி.காம் 153 பேரும், பிஎட் 149 பேரும், பிபிஏ 138 பேரும், பி.லிட் 121 பேரும், பிஏ ஆங்கிலம் 110 பேரும், பிசிஏ பிரிவில் 92 பேரும் பட்டம் பெற்றுள்ளனர்.
அதேபோல, 62 வகையான முதுநிலை பட்டப்படிப்பில் தமிழ் பிரிவில் 99 பேரும், ஆங்கிலத்தில் 87 பேரும், வரலாற்றில் 78 பேரும் பட்டம் பெற்றுள்ளனர். மேலும், 46பேர் முதுநிலை டிப்ளமோ, 317 பேர் டிப்ளமோ,72 தொழிற்கல்வி டிப்ளமோ, 23 பேர் சான்றிதழ் படிப்புகள், 12 பேர் குறுகியகால படிப்புகள் என மொத்தம் 3,107 பேர் திறந்தநிலை பல்கலை. மூலமாகப் பயனடைந்துள்ளனர். இதில் 1,252 பேர் பெண்கள், 1,855 பேர் ஆண்கள்.
குறிப்பாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கும் பணிக்கான சிறப்பு பிஎட் படிப்பில் 2008-ம் ஆண்டு முதல்2018-ம் ஆண்டு வரை மொத்தம் 3,664 பேர் படித்துள்ளனர். அதில் 3,257 பேர் பட்டம் பெற்றுள்ளனர். இதில் 207 பேர் மாற்றுத் திறனாளிகள் ஆகும்.
இதுகுறித்து திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தர் கோ.பார்த்தசாரதி கூறியது: மாற்றுத் திறனாளிகள், யார் தயவும் இல்லாமல் பொருளாதாரத்தில் முன்னேற கல்வி மட்டுமே வழிவகை செய்யும். இதனைக் கருத்தில் கொண்டு 2008-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்த இலவச கல்வித் திட்டத்துக்குப் பின்னர் திறந்தநிலைப் பல்கலையில் அதிகப்படியான சேர்க்கை நடைபெற்றது.
அதன்படி, இளநிலை, முதுநிலை, டிப்ளமோஉள்ளிட்ட 9 பிரிவுகளில் 3,107 மாற்றுத் திறனாளிகள் பட்டமும், சான்றிதழும் பெற்றுள்ளனர். இது ஒட்டுமொத்த இந்தியாவிலும் வேறு எந்த பல்கலைக்கழகமும் செய்யாத சாதனையாகும். அதேபோல, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வியிலேயே தனிக் கவனம் செலுத்தும் வித மாகச் சிறப்பு பி.எட் படிப்பு 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்படி, பிஎட் முடித்தவர்களில் சிறப்பு எம்.எட் படிப்பில் 55 பேரும், முதுநிலை சிறப்புக்கல்வி படிப்புகளில் 153 பேர் பட்டம் பெற்றுள்ளனர். மேலும், கூடுதலான மாற்றுத் திறனாளிகள் சிறப்பு எம்எட் பயிலுவதற்கு வசதியாக, அப்படிப்பை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பல்கலையில் பட்டம் பெற்ற மாற்றுத் திறனாளிகள் சிலர் கூறும்போது, “கல்வி நிறுவனங்களுக்கு நாங்கள் நேரடியாகச் சென்று கல்வி பயிலுவதற்கு இடவசதி,கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி போன்றபல்வேறு காரணிகள் தடையாக உள்ளன. இந்த தடைகள் திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி முறையில் இல்லை. மேலும், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு எந்த கட்டணமும் வசூல் செய்யப்படுவதில்லை. அதேபோல, தேர்வு எழுதுவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளையும் பல்கலை. மேற்கொள்கிறது. இதன் காரணமாகவே, அதிக அளவில் திறந்தநிலை பல்கலை.யை விரும்புகிறோம்” என்றனர்.