இந்தியா மீது தடை விதிப்பதா? அமெரிக்க எம்.பி., கடும் பாய்ச்சல்!| Dinamalar

வாஷிங்டன்:”நட்பு நாடான இந்தியா மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பது மிக மடத்தனமான செயலாக இருக்கும்,” என, அந்நாட்டு எம்.பி., டெட் குருஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசு, சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்யும் நாடுகள், வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கிறது. இதன்படி ரஷ்யாவிடம் ‘எஸ்-400’ ஏவுகணை சாதனத்தை வாங்கிய துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதுபோல, ரஷ்யாவிடம், 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, ஐந்து ‘எஸ்-400’ ஏவுகணை சாதனங்களை வாங்கும் இந்தியா மீதும் பொருளாதார தடை விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் அடங்கிய வெளியுறவு குழுவின் கூட்டம் நடந்தது. இதில் குடியரசு கட்சி எம்.பி., டெட் குருஸ் பேசியதாவது:இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க, அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா மீது தடை விதிப்பது மிக மடத்தனமான செயலாக இருக்கும். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற ஓராண்டில், இந்தியா உடனான நல்லுறவு சீர்குலைந்துள்ளது. க்ஷ

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா.,வில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்பது, அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிப்பதற்கு மறைமுக காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்தியா மட்டுமின்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் தீர்மானத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் இந்தியா மீது தடை விதிக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.