உக்ரைன் ரஷ்யா இடையே நடந்து வரும் யுத்தம் 10 நாள்களைக் கடந்தும் தொடர்கிறது. போர் சூழலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு அண்டை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் போர் சூழல் தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடனும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் தொலைபேசியில் உரையாடினார். அப்போது போர் நிறுத்தம் வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வியாடோஸ்லாவ் யுராஷ், “இந்த நூற்றாண்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எங்கள் ஜனாதிபதிக்குப் பிரதமர் மோடி விடுத்த அழைப்புக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.
ரஷ்ய உறவில் இந்தியாவின் நிலைப்பாட்டைப் பொறுத்த வரையில், இந்தியா மேற்கொண்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். மேலும், ரஷ்யாவை இந்தியா தண்டிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.