புதுடில்லி: ‘கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் முடங்கிய சர்வதேச பயணியர் விமான சேவை, வரும் 27ம் தேதி முதல் வழக்கம் போல் செயல்படும்’ என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து உள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்ததால், 2020 மார்ச் 23 முதல், சர்வதேச பயணியர் விமான சேவை தடை செய்யப்பட்டது. பின், ஜூலை 2020 முதல் குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையே ஒப்பந்த அடிப்படையில் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின், வழக்கமான சர்வதேச பயணியர் விமான சேவை, வரும் 27ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என, விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உலக நாடுகளில், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி பணிகள் முழுமை அடைந்துள்ளன. இதனால் பல நாடுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, சர்வதேச பயணியர் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, 27ம் தேதி முதல் சர்வதேச அளவில் வணிக மற்றும் பயணியர் விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படும். கொரோனா காரணமாக இயக்கப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான விமான சேவை ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Advertisement