நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இது தொடர்பான சர்வ கட்சி மாநாடு இம்மாத இறுதியில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.
ஒரு வெற்றிகரமான சர்வகட்சி மாநாடு பொதுவாக ஒரு தேசிய அரசாங்கத்தின் முதல் படியாக பார்க்கப்படுகிறது.
எந்த விதமான அரசாங்கமாக இருந்தாலும், தேசிய ஒருமித்த அடிப்படையில் ஆட்சி செய்வது என்பது இதன் பொருளாகும் என குறிப்பிடப்படுகின்றது.
அண்மைக்கால வரலாற்றில் இதுவரை கண்டிராத பொருளாதார நெருக்கடியை இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ளது.
கட்சி வேறுபாடின்றி அரசியல் இணக்கப்பாட்டுக்கு வந்து அவ்வாறானதொரு நிலைமையை எதிர்கொள்ள முடியாவிட்டால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என பல தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.