புதுடில்லி:இளநிலை மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ நுழைவு தேர்வு எழுதும் அனைத்து பிரிவினருக்குமான வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ். – பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தேர்வு எழுதும் பொதுப் பிரிவினருக்கு 25 வயதும்; இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 30 வயதும் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அனைத்து பிரிவினருக்குமான வயது வரம்பை நீக்கி என்.எம்.சி. எனப்படும் தேசிய மருத்துவ கமிஷன் நேற்று அறிவித்துள்ளது.இதுகுறித்து என்.எம்.சி.யின் செயலர் டாக்டர் புல்கேஷ் குமார் நேற்று கூறியதாவது:கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் என்.எம்.சி. கமிஷனின் நான்காவது ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதும் அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பை நீக்குவதென முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.இவ்வாறு கூறினார்.சி.டி.இ.டி. தேர்வு முடிவுகள் வெளியீடுசி.டி.இ.டி. எனப்படும் மத்திய ஆசிரியர்கள் தகுதித் தேர்வு கடந்த டிசம்பர் 16ம் தேதி முதல் ஜனவரி 21ம் தேதி வரை நடந்தது. அந்த தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் நேற்று வெளியிட்டது. அதன்படி முதல் தாள் எழுதிய 14.95 லட்சம் பேரில் 4.45 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் இரண்டாம் தாள் எழுதிய 12.78 லட்சம் பேரில் 2.20 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement