புதுடெல்லி: உக்ரைனின் சுமி நகரில் சிக்கித் தவித்த 694 இந்திய மாணவ, மாணவியரும் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர்.
உக்ரைனின் வடகிழக்கில் சுமி அமைந்துள்ளது. அந்த நகரம் ரஷ்ய எல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்குள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஏராளமான இந்திய மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
உக்ரைன் போரில் சுமி நகரம்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அங்கு சிக்கித் தவித்த இந்திய மாணவ, மாணவியரை மீட்பதில் சிக்கல் நீடித்து வந்தது.
சுமியில் தங்கியிருந்த இந்தியர்களை, ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் மீட்க திட்ட மிடப்பட்டது. ஆனால் உக்ரைன் அரசு மறுப்பு தெரிவித்ததால் திட்டம் கைவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்தியர் களை மீட்க ஏதுவாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ரஷ்யா, உக்ரைன் தரப்பிடம் இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.
இதை ஏற்று ரஷ்ய ராணுவம் சுமி நகரில் நேற்று போர் நிறுத்தத்தை அமல் செய்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சுமியில் சிக்கித் தவித்த 694 இந்திய மாணவ, மாணவியரும் பேருந்துகள் மூலம் உக்ரைனின் போல்டாவா நகருக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து ரயில் மூலம் மேற்கு உக்ரைன் பகுதிக்கு மாணவர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகள் வாயிலாக 694 இந்திய மாணவர்களும் விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “சுமியில் தவித்த 694 மாணவர்களும் பேருந்துகள் மூலம் போல்டாவா அழைத்து செல்லப்பட்டுள் ளனர்” என்று தெரிவித்தார்.
முன்னதாக உக்ரைன் தலைநகர் கீவில் செயல்படும் இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “மார்ச் 8-ம் தேதி போர் நிறுத்தம் அமல் செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பை அனைத்து இந்திய மாணவர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ரயில் மற்றும் வாகனங்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்திய தூதரகத்தின் அறிவுரைப்படி ஆங்காங்கே சிக்கித் தவித்த இந்திய மாணவர்களும் பாதுகாப்பான இடங்களை சென்றடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
ஆபரேஷன் கங்கா விரைவில் நிறைவு பெறும் என்று மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
– பிடிஐ