புதுடெல்லி: “உக்ரைனில் சிக்கித் தவித்த சொந்த நாட்டு மக்களை திரும்ப அழைத்து வர இந்திய அரசு மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளது” என, நாடு திருப்பிய உத்தரப் பிரதேச மாணவர்களிடம் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மற்றும் மாணவர்களை ’ஆபரேஷன் கங்கா’ திட்டம் மூலமாக இந்திய அரசு அழைத்து வருகிறது. அவ்வாறு இந்தியா திரும்பிய உத்தரப் பிரதேச மாணவர்களை, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்தார். அப்போது மாணவர்களிடம் பேசிய முதல்வர் கூறியது: “இந்திய அரசு மட்டும்தான் ஆப்ரேஷன் கங்கா மூலமாக தன் நாட்டு மாணவர்கள், மக்களை பாதுகாப்பாக திருப்பி அழைத்து வந்துள்ளது.
உங்களுடன் தங்கியிருந்த மற்ற நாட்டு மாணவர்கள் அவர்களின் சொந்த முயற்சியாலும், கடவுளின் கருணையாலுமே நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் நாட்டு அரசாங்கம் அம்மக்களைத் திருப்பி அழைத்துச் செல்வதில் எந்த கவனமும் செலுத்தவில்லை.
ருமேனியா, ஹங்கேரி, போலந்து நாடுகளுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருந்த சுமுகமான நட்புறவினால் அந்த இடங்களில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. எல்லை நாடுகளில் இந்திய குடிமக்களுக்கு கிடைத்த இந்த வசதி, வேறேந்த நாட்டு மக்களுக்கும் கிடைக்கவில்லை.
உக்ரைனில் தங்கியிருந்த உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 2,290 மாணவர்களில், 2,078 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். மற்றவர்களை திரும்ப அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும்.
உக்ரைனில் போர் எப்போது நிறைவடையும் எனத் தெரியாததால், மாணவர்களின் படிப்பை இங்கு தொடர தயாராக வேண்டும். அரசு உங்களின் படிப்பில் கவனமும் அக்கறையும் கொண்டுள்ளது” என்று மாணவர்களிடம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.