மாஸ்கோ: “உக்ரைனின் ஜெலன்ஸ்கி அரசை கவிழ்க்கும் திட்டம் ஏதும் இல்லை. ஆனால், அமெரிக்க நிதி ஆதாரத்துடன் அங்கு நடந்து வந்த உயிரி ஆயுதத் திட்டம் (Bio Weapons) விளக்கமளிக்கப்பட வேண்டும்” என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா இன்று (மார்ச் 9) கூறியது: “ரஷ்யா – உக்ரைன் இடையிலான மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஜெலன்ஸ்கி அரசை கவிழ்க்கும் எந்தத் திட்டமும் ரஷ்யாவிற்கு இல்லை. ஆனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையின்போது, கீவ் பகுதியில் அமெரிக்க நிதி ஆதாரத்துடன் செயல்படுத்தப்பட்ட ராணுவ உயிரி ஆயுதத் திட்டத்திற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
உக்ரைனில் அமெரிக்கா உயிரி ஆயுதம் தயாரித்ததற்கான ஆவண ஆதாரங்கள் ரஷ்யா வசம் உள்ளது. அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான மாநில துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட், உயிரி ஆயுத ஆராய்ச்சிக்கான ஆய்வகங்கள் இருப்பதை கேள்விக்கான பதில் ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.
நீங்கள் (அமெரிக்கா) உக்ரைனில் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? உக்ரைனில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு அமெரிக்க ராணுவத் துறை நிதியளித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் வட்டாரமும், ராணுவ துறையும், உக்ரைனில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அதிகாரபூர்வாக உலகிற்கு விளக்கம் அளிக்க வேண்டும். அதுவும் தலைவர்களுக்கு இடையில் இல்லாமல், உலக மக்களிடம் தெரிவிக்க வேண்டும். நாங்கள், உங்களிடம் அதுகுறித்த விவரங்களை எதிர்பார்க்கிறோம். உலகம் அதற்காக காத்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, உயிரி ஆயுதம் குறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனும் உக்ரைன் அரசும் ஏற்கெனவே மறுப்பு தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.