புதுடெல்லி: உக்ரைனில் சிக்கிய வங்கதேசத்தை சேர்ந்த 9 பேரை மீட்க நடவடிக்கை எடுத்த இந்தியாவுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலைத் தொடங்கியது. அப்போது சுமார் 20,000 மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் அங்கிருந்தனர். அவர்களை மீட்க ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதுவரை சுமார் 18000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மட்டுமின்றி இந்தியாவின் அண்டை நாடுகளின் மாணவர்களை மீட்க இந்திய தூதரகம் மீட்டு வருகிறது. ஏற்கெனவே வங்கதேச மாணவர் ஒருவரையும், நேபாள குடிமகன் ஒருவரையும் இந்தியா ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மீட்டது.
நேபாளத்தைச் சேர்ந்த ரோஷன் ஜாவும், தன்னை மீட்ட இந்திய தூதர அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துார். இதுமட்டுமின்றி பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி ஒருவரை போர்ப் பகுதியிலிருந்து மேற்கு எல்லைக்கு இந்திய அதிகாரிகள் மீட்டு வந்துள்ளனர்.
இது குறித்து அந்த மாணவி நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘‘நான் பாகிஸ்தானின் அஸ்மா ஷஃபீக். நான் உக்ரைனில் போர்ப் பகுதியில் மாட்டிக் கொண்டேன். என்னை பத்திரமாக இங்கு அழைத்து வந்த இந்தியத் தூதரத்துக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இந்தியப் பிரதமருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கிருந்து பத்திரமாக வீடு செல்வேன் என்று நம்புகிறேன்” என்று அந்த வீடியோவில் பாகிஸ்தான் மாணவி தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் உக்ரைனில் சிக்கிய வங்கதேசத்தை சேர்ந்த 9 பேரை மீட்க நடவடிக்கை எடுத்த இந்தியாவுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.