ஜெனீவா: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து, உக்ரைன் நாட்டின் அணுசக்தி நிலையங்களைப் பாதுகாக்கும் வகையில், சர்வதேச அணுசக்தி கழகத்தின் தலைவர் முன்மொழிந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை செர்னோபிலில் நடக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது.
கடந்த மாதம் 24-ம் தேதியில் இருந்து சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. 14 நாட்களாக நீடித்து வரும் இந்த தாக்குதல் குறித்து குறிப்பிடும்போது, ’உலகில் அணுசக்தி திட்டத்தில் முன்னேற்றம், விரிவாக்கம் அடைந்த ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடைபெறுவது இதுவே முதல் முறை’ என சர்வதேச அணுசக்தி கழகம் ( IAEA) தெரிவித்துள்ளது.
உக்ரைனில், ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜாபோரிசியா உள்ளிட்ட நான்கு அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த வாரத்தில் நடந்த தாக்குதலில், ஜாபோரிசியா அணுமின் நிலையத்தின் அருகில் இருக்கும் கட்டிடம் தாக்குதலுக்குள்ளாகி தீக்கிரையானது. ரஷ்ய படைகள் இந்த தாக்குதலை நடத்தியதாக உக்ரைனும், உக்ரைனின் நாசகாரர்கள்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷ்யாவும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டன. தற்போது அந்த அணுமின் நிலையம், ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இந்தத் தாக்குதல்களால் அணுமின் நிலைத்தில் எந்த வித கசிவுகளும் ஏற்படவில்லை என்ற போதிலும், அணு உலைகள் தாக்கப்பட்டால் ஏற்பட இருக்கும் பயங்கர விளைவுகளை அது உணர்த்தியுள்ளது.
இந்த நிலையில், கடந்த 1986-ம் ஆண்டு பயங்கர அணுவிளைவுக்கு உள்ளான செர்னோபிலில் வைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஐ.நா.வின் அணு கண்காணிப்புக்குழுவின் தலைவர் ரஃபேல் கிரோசி அழைப்பு விடுத்தார். உக்ரைனின் அணுமின் நிலையங்களை பாதுகாக்கும் வகையிலான இந்த யோசனைக்கு ரஷ்யா ஆதரவு தெரிவிப்பதாக அந்நாட்டின் சர்வதேச அணுசக்தி கழகத்திற்கான தூதர் மிகைல் உலினோவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், முத்தரப்பு பேச்சுவார்த்தையை நாங்கள் ஆதரிக்கிறோம். உலகில் வேறு பல தலைநகரங்கள் உள்ளன. செர்னோபில் அதற்கான சரியான இடம் இல்லை என நாங்கள் நம்புகிறோம். எந்த நேரத்திலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். எல்லாம் உக்ரைனை நடவடிக்கையை பொறுத்து இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தப் பேச்சுவார்த்தையை ஆதரிப்பதாக பிரஞ்சு அதிபருடன் ஞாயிற்றுக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.