புதுடெல்லி: போர் நடக்கும் இந்த நேரத்தில் உக்ரைன் நாட்டுக்கு செல்ல பஞ்சாப் இளைஞர்கள் முயற்சித்து வருகின்றனர். அதற்காக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு உதவி மையங்களை தொடர்பு கொண்டு ஏராளமானோர் தகவல்கள் கேட்டறிந்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பஞ்சாபியர்கள். ஆண்டுதோறும் சராசரியாக ரூ.28,500 கோடியை கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடுகள் செல்வதற்கு பஞ்சாபிகள் செலவிடுவதாக மக்களவையின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக ஒன்றரை லட்சம் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அவர்கள் குடும்பத்தின் நிலங்களை கூட விற்று விடுகின்றனர்.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர் காலத்தில் அங்கு சென்று தங்க பஞ்சாபின் இளைஞர்கள் பலர் விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் அரசு உதவி மையங்களுக்கு போன் செய்து விசாரித்து வருகின்றனர்.
அப்படி விசாரிப்பவர்களிடம், ‘போர் நடக்கும் நேரத்தில் உக்ரைன் செல்வது ஆபத்து. மேலும் இந்திய அரசும் அதற்கு அனுமதிக்காது’’ என்று உதவி மையங்களில் உள்ள அதிகாரிகள் கூறி வருகின்றனர். எனினும், அதை பற்றி கவலைப்படாமல் உக்ரைனுக்கு செல்வது எப்படி என்று பஞ்சாபியர்கள் விசாரித்து வருவது அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உதவி மையங்களில் உள்ளவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உக்ரைன் செல்வது குறித்து விசாரிக்கும் நபர்களின் கைப்பேசி எண்கள் மூலம் பஞ்சாப் போலீஸார் அவர்களை நேரில் சந்தித்து போர் நேரத்தில் உக்ரைன் செல்வது எவ்வளவு ஆபத்து என்று அறிவுரை கூறி வருகின்றனர்.
உக்ரைன் மீதான போர் குறித்த செய்திகளை சேகரிக்க அங்கு சென்றுள்ள சில இந்திய ஊடகங்கள், உக்ரைன் எல்லையிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கே செல்கின்றனர். அங்கிருந்துதான் செய்திகளை சேகரித்து அனுப்புகின்றனர். அவர்களுக்கும் உக்ரைனில் நுழைய அனுமதி கிடைப்பதில்லை.
இச்சூழலில், அங்கு செல்ல விரும்பும் பஞ்சாப் இளைஞர்கள் ரஷ்யாவுக்கு சென்று அங்கிருந்து போர் முடிந்தவுடன் உக்ரைனில் நுழைய திட்டமிடுகின்றனர். மேலும் சிலர் ஐரோப்பிய நாடுகள் வழியாக போருக்கு பின் உக்ரைனில் நுழைய முயல்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில், பஞ்சாபியர்களின் வெளிநாட்டு மோகத்தால் மாநிலக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கையும் காலியாக உள்ளதாக கூறுகின்றனர். இதுதவிர பஞ்சாப் இளைஞர்கள் பலர் போதைக்கு அடிமையாவதும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை குறைய காரணம் என்று புகார் உள்ளது.
மீட்கப்பட்ட மாணவர்கள்
உக்ரைனில் சிக்கிய மருத்துவ மாணவர்கள் இதுவரை சுமார் 18,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களில் இதுவரை 1,200 பேர் மீட்கப் பட்டுள்ளனர். இப்பணியில் தீவிரம் காட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா தலைமையில் நியமிக்கப்பட்ட குழு டெல்லியில் முகாமிட்டுள்ளது.
இக்குழுவினர் கடந்த 3 நாட்களாக தமிழக மாணவர் களுக்கு தனி விமானங்கள் ஏற்பாடு செய்து சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர். தற் போது உக்ரைனுக்கு பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டி னருக்கு உக்ரைன் அரசு விசா வழங்கு வதையும் நிறுத்தி வைத் துள்ளது குறிப்பிடத்தக்கது.