லக்னோ: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களால் முடிந்தவரை போராடினோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டப் பேரவைக்கு நேற்று முன்தினத் துடன் 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
உத்தரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸை ஆதரித்து பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் இறுதிகட்ட தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் உ.பி.யில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தன. காங்கிரஸுக்கு ஒற்றை இலக்கத்திலேயே தொகுதிகள் கிடைக்கும் என்றும் தெரிவித்தன.
பொறுத்திருந்து பார்ப்போம்
இதுகுறித்து லக்னோவில் பிரியங்கா காந்தியிடம் நேற்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து பிரியங்கா கூறுகையில், ‘‘உத்தர பிரதேச தேர்தலில் எங்களால் முடிந்தவரை போராடினோம். தேர்தல் முடிவு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 159 பெண் வேட் பாளர்களோடு கொண்டாட உள்ளோம். தேர்தல் களத்தில் போராடிய அவர்களை சிறப்பிக்க இதை விட சிறந்த தருணம் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.