சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ‘சசிகலாவை இணைக்க நெருக்கடி, தனிக்கட்சி தொடக்குகிறாரா பழனிசாமி’ என்று செய்தி வெளியிட்ட தமிழ் இணைய ஊடகத்துக்கு அதிமுக எச்சரிக்கை தெரிவித்துள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமி சார்பில், வழக்கறிஞர் ராஜகோபால், பொய்யான செய்திக்காக மன்னிப்பு கோர வேண்டும் என ஊடக நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் இணைந்ததில் இருந்தே, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற குரல்கள் சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சசிகலாவுக்கு ஆதரவான குரல் அதிமுகவுக்கு வெளியேதான் ஒலித்து வந்தது. யாரேனும், சிலர் சசிகலாவுக்கு ஆதரவாக பேசினால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து எடுத்து வந்துள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடித்து வெளியே வந்த சசிகலா, அதிமுகவை கைப்பற்ற மேற்கொண்ட சில முயற்சிகளும் அவருக்கு பெரிய பலனளிக்கவில்லை. அதிமுக, அமமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் போனில் பேசிய ஆடியோக்களை வெளியிட்டு சலசலப்பை மட்டுமே ஏற்படுத்த முடிந்தது. இதுவே அதிமுக முழுக் கட்டுப்பாடு ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இரட்டைத் தலைமையிடம் உறுதியாக உள்ளது என்பதை காட்டி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில்தான், கடந்த வாரம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் முன்னிலையில் நடைபெற்ற தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற சசிகலாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி திர்மானம் நிறைவேற்றினர். மேலும், இதே போல, மற்ற மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று குரல்கொடுத்தனர். ஆனால், அதிமுக தலைமை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர்.
அதுமட்டுமல்லாமல், சசிகலாவை சந்தித்த ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர். இப்படி, அதிமுகவின் முழு கட்டுப்பாடும் தங்கள் கையில்தான் உள்ளது என்று தங்கள் நடவடிக்கை மூலம் உறுதிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பழனிசாமி வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், தமிழ் இணைய ஊடகம் ஒன்று, சசிகலாவை இணைக்க நெருக்கடி… தனிக்கட்சி தொடங்குகிறாரா என்று பிரபல செய்தி வெளியிட்டதால் அதிமுக தலைமை கடும் கோபம் அடைந்துள்ளது.
அதுமட்டுமல்ல, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை குறித்து விஷம நோக்கத்துடன் ட்விட்டரில் அவதூறு பதிவு வெளியிட்ட, அந்த தமிழ் இணைய ஊடகம், உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்று பழனிசாமி சார்பில் வழகறிஞர் ராஜகோபால் மூலம் ஊடகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கை செய்துள்ளது.
பழனிசாமி தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என்று கூறுவதா என அதிமுக சார்பில் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய ஊடகம் வெளியிட்ட செய்தி கட்டுரை பொய்யானது, சித்தரிக்கப்பட்டது. அற்பமானது, இழிவானது என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், தனிக்கட்சி தொடங்கப்போகிறாரா பழனிசாமி என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது, பொய்யானது, அவதூறானது, போலியான செய்தி என்று பழனிசாமி குற்றம் சாட்டினார். மேலும், இந்த செய்தி அதிமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. செய்தியை வெளியிடுவதற்கு முன்பு, அதன் உண்மைத் தன்மையையும் துல்லியத்தையும் பழனிசாமியிடம் கேட்டு சரிபார்த்திருக்க வேண்டும் என்று அந்த செய்தி கூறியது. இந்த பொறுப்பற்ற அணுகுமுறை காரணமாக பழனிசாமி நற்பெயரை இழந்துள்ளார் என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
பழனிசாமி குறித்து அவதூறான, அவதூறான / இழிவுபடுத்தும் / பொய்யான செய்திக்கு அந்த தமிழ் இணைய ஊடகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் செய்தியை, அந்த நிறுவனம் தனது அனைத்து சேனல்கள், சமூக ஊடக தளங்களில் இருந்து நீக்க வேண்டும். ஊடகங்கள் வேறு எந்த தளங்களிலும் அதை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் கோரினார். அவ்வாறு செய்யத் தவறினால், பழனிசாமி அவர்கள் மீது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சட்டப்படி நடவடிக்கை எடுப்பார் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“