புதுடெல்லி: உக்ரைன் தலைநகர் கீவ் நகரை வடக்கு மற்றும் மேற்கிலிருந்து ரஷ்ய படைகள் நெருங்கிவரும் வேளையில், “நான் எங்கும் ஓடிஒளியவில்லை, எதற்கும் பயப்படவில்லை” என்று தனது இருப்பிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்கி.
உக்ரைன் தலைநகரான கீவ்நகரை வடக்கு மற்றும் மேற்கில் இருந்து ரஷ்ய படைகள் நெருங்கி வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் அதிபர் வாலோடிமிர் ஜெலன்கி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் கீவ் நகரின் பான்கோவா தெருவில் தங்கி இருக்கிறேன். நான் எங்கும்ஓடி ஒளியவில்லை. எதற்கும் பயப்படவில்லை. தேசபக்தி மிக்க இந்தப் போரில் வெற்றிபெற இயன்ற அனைத்தையும் செய்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கிய கடந்த 2 வாரத்தில் 3 கொலை முயற்சிகளில் ஜெலன்கி உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளாகும் உக்ரைன் நகரங்களில் இருந்து பொதுமக்களை பத்திரமாக வெளியேற்றுவதற்கான வழித்தடங்களை ரஷ்யா நேற்று முன்தினம் அறிவித்தது.
ஆனால் ரஷ்யாவால் அறிவிக்கப்பட்ட 6 வழித்தடங்களில் 4, ரஷ்யா அல்லது அதன் நட்பு நாடான பெலாரஸுக்கு இட்டுச் சென்றதால் குடிமக்களை வெளியேற்ற உக்ரைன் மறுத்துவிட்டது.
தப்பிச் செல்ல முயலும் பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்துவதாகவும் ஜெலன்கி குற்றம் சாட்டினார்.