நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா. தன் பைக்கை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். அதற்காக ஆன்லைன் மூலம் விளம்பரம் கொடுத்திருக்கிறார். அதைப் பார்த்த சிலர் பைக் விலை குறித்து விசாரித்திருக்கிறார்கள். சிலர் நேரில் வந்து பார்த்துச் சென்றுள்ளனர். அப்போதெல்லாம் தன் பைக் திருட்டு போகும் என அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
இந்த நிலையில், முத்துக்கிருஷ்ணன் என்பவர் இளையராஜாவை தொடர்பு கொண்டு இரு சக்கர வாகனத்தை தான் வாங்கிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். விலை குறித்து விசாரித்த பின்னர், பைக்கை ஓட்டிப் பார்த்தால் மட்டுமே அதை வாங்குவது பற்றி முடிவெடுக்க முடியும் எனச் சொல்லியிருக்கிறார்.
பைக் விற்பனை செய்ய இருந்த இளையராஜா அதற்கு ஒப்புக் கொண்டதால், இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரம் கிராமத்துக்கு வரச் சொல்லியுள்ளார். இளையராஜாவும் பைக்குடன் அவர் சொன்ன இடத்துக்குச் சென்றுள்ளார்.
முத்துகிருஷ்ணனுடன் அவரது நண்பவர் ஒருவரும் வந்துள்ளார். அவரை மெக்கானிக் என்று அறிமுகப்படுத்திய முத்துக்கிருஷ்ணன், தாங்கள் இருவரும் பைக்கை சிறிது தூரம் ஓட்டிப் பார்த்தால் மட்டுமே இன்ஜீன் நிலைமை பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்பதால் ஓட்டிப் பார்த்துவிட்டு வாங்கிக் கொள்கிறோம் என் தெரிவித்துள்ளார். அதை நம்பிய இளையராஜா அவரிடம் பைக்கை கொடுத்துள்ளார்.
பைக்குடன் சென்ற முத்துக்கிருஷ்ணனும் அவரது நண்பரும் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அத்துடன், பைக்கின் கவரில் இளையராஜா தனது செல்போனையும் வைத்திருந்துள்ளார். பைக் மற்றும் செல்போனுடன் தன்னை ஒருவர் ஏமாற்றியதைப் புரிந்து கொண்ட இளையராஜா உடனடியாக களக்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இளையராஜாவின் செல்போன் பைக் கவரில் இருந்ததால் அதன் டவரை வைத்து போலீஸார், பைக் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் சாலையோரத்தில் உள்ள ஒரு கடையில் நின்றுகொண்டிருந்த முத்துக்கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து பைக் மற்றும் செல்போனை மீட்டனர்.
ஒரு திரைப்படத்தில் வடிவேலுவை ஜாமீனுக்கு வைத்துவிட்டு ஒருவர் பைக்கை ஓட்டிப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு எடுத்துச் சென்று விடுவார். அதே போன்று நிஜத்தில் நடந்த திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் போலீஸாரின் துரித முயற்சியால் பைக் கிடைத்ததில் உரிமையாளரான இளையராஜா மகிழ்ந்து போயிருக்கிறார்.