கராச்சி: IC-814 விமானத்தைக் கடத்தியவர்களில் ஒருவரான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சார்ந்த தீவிரவாதி மிஸ்ட்ரி ஜஹூர் இப்ரஹிம், கராச்சியில் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1999-ஆம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லி வந்த IC-814 விமானத்தைக் கடத்திய 5 பேரில் மிஸ்ட்ரி ஜாஹூர் இப்ரஹிம் மிகவும் கொடூரமானவராக கருதப்படுகிறார். இத்தனை காலை ஜாஹித் அகுந்த் என்ற போலி அடையாளத்துடன் கராச்சியில் வாழ்ந்து வந்த மிஸ்ட்ரியை இன்று அடையாளம் தெரியாத நபர் தலையில் இரண்டு முறை சுட்டார். இதில் மிஸ்ட்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிகிறது.
மிஸ்ட்ரி கராச்சியில் அக்தார் காலனி என்ற பகுதியில் கிரஸன்ட் ஃபர்னிச்சர் என்ற மர சாமான் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று அடையாளம் தெரியாத நபரால் மிஸ்ட்ரி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் ஜெய்ஷ்-இ-முகமது செயல் தலைவர் ரவுஃப் அக்ஸார் கலந்து கொண்டார். இவர் ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அசாரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
1999 கடத்தல் சம்பவத்தின்போது மிஸ்ட்ரியின் ரகசிய குறியீடு ‘டாக்டர்’. விமானக் கடத்தலில் ஈடுபட்ட ஐவரில் மிகக் கொடியவராக அறியப்படும் இவர், விமானத்தில் இருந்த 25 இந்திய இளைஞரை கழுத்தறுத்து படுகொலை செய்தார்.
1999ல் நடந்த விமானக் கடத்தல் பின்னணி: 1999. மாலை மணி 4.25. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐ.சி. 184 நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு வந்துகொண்டிருக்கிறது. 178 பயணிகள், இரு விமான ஓட்டிகள், ஏர் ஹோஸ்டஸ்கள், பிற உதவியாளர்கள் என 15 ஏர்லைன்ஸ் ஊழியர்கள். மொத்தம் 193 பேர். மணி 5.05. ஐந்து பயணிகள் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்திருக்கிறார்கள். இருவர் விமான ஓட்டி அறை அருகே போகிறார்கள்; மற்ற மூவரும், விமானத்தின் முன், நடு, பின்பகுதிகளில். அவர்கள் கைகளில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கத்திகள்… பயணிகள் எல்லோருக்கும் புரிந்துவிட்டது, விமானம் கடத்தல்காரர்கள் கையில் என்று. தீவிரவாதிகள் என்ன செய்யப்போகிறார்கள் என பயணிகள் எல்லோரும் அச்சத்தில் உறைந்தனர்.
கடத்தல்காரர்கள் தங்களை காஷ்மீரில் இருக்கும் ஹர்கத்-உல்-முஜாஹிதீன் என்னும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தொண்டர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தலைவன் சீஃப் என்று தன் சகாக்களால் அழைக்கப்படுகிறார். விமானத்தைப் பாகிஸ்தானில் லாகூர் விமான நிலையத்தில் இறக்கச் சொல்ல, லாகூர் விமான அதிகாரிகள் அனுமதி தர மறுக்கிறார்கள். பாகிஸ்தானில் வேறு ஏதாவது விமான நிலையத்தில் இறக்குமாறு சீஃப் கட்டளையிட, அதுவரை பயணிக்க எரிபொருள் இல்லை. அருகில் இருப்பது இந்தியாவின் அமிர்தசரஸ். தயக்கத்தோடு அங்கே போக சீஃபிடம் இருந்து அனுமதி வருகிறது. அதற்குள் யாருக்கும் தெரியாதபடி, தாங்கள் கடத்தப்பட்ட சேதியை டெல்லிக்குத் தெரிவித்து விடுகிறார் விமானி. கடத்தல்காரர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.
தீவிரவாதிகளின் நிபந்தனை: இந்தியா 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் தரவேண்டும். இந்தியச் சிறைகளில் இருக்கும் 36 பாகிஸ்தானியத் தீவிரவாதிகளை எந்த நிபந்தனைகளும் இல்லாமல் விடுதலை செய்யவேண்டும். இந்திய ராணுவத்தால் ஜம்முவில் கொல்லப்பட்ட ஸஜத் ஆ கானி என்னும் பாகிஸ்தான் தீவிரவாதியின் உடலைச் சகல மரியாதைகளுடன் ஒப்படைக்க வேண்டும். “இவற்றுக்குச் சம்மதிக்காவிட்டால், விமானத்தில் இருக்கும் அனைத்து பயணிகளையும் கொன்றுவிடுவோம்” என்று மிரட்டினர். மத்தியில் அப்போது பதவியில் இருந்த வாஜ்பாய் அரசு அதிர்ந்துபோனது. அதன் பின்னர் துபாய், காந்தஹார் என தீவிரவாதிகள் போக்கு காட்டினர்.
பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் டிசம்பர் 31-ஆம் தேதியன்று சிறையில் இருந்த மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகளை விடுதலை செய்ய இந்தியா சம்மதித்தது. பதிலாக, எல்லாப் பயணிகளையும், ஏர்லைன்ஸ் ஊழியர்களையும் விடுவிக்கத் தீவிரவாதிகள் சம்மதித்தார்கள். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், விடுதலை செய்யப்பட்ட மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழைத்துக்கொண்டு, தனி விமானத்தில் காந்தஹார் சென்றார். பரிமாற்றம் நடந்தது. பயணிகள் அமைச்சரின் விமானத்தில் ஏறி தாயகம் வந்தனர். ஆனால், 24 வயது இளைஞர் மட்டும் கொல்லப்பட்டார்.
அந்த இளைஞரைக் கொன்ற மிஸ்ட்ரிதான் இப்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார்.