காந்தஹார் விமானக் கடத்தல் ஞாபகமிருக்கா?.. முக்கிய கடத்தல்காரன் சுட்டுக் கொலை!

1999ம் ஆண்டு நடந்த காந்தஹார் விமானக் கடத்தலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான மிஸ்திரி ஸஹூர் இப்ராகிம் என்பவர், பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஐசி 814 விமானம், 179 பயணிகள், 11 ஊழியர்களுடன் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு கிளம்பியது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டது. 5 தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தினர். ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் விமானம் தரையிறக்கப்பட்டது.

காத்மாண்டுவிலிருந்து அமிர்தசரஸுக்கும், பின்னர் லாகூர், துபாய் என அந்த விமானம் பல நகரங்களுக்குப் பயணித்து கடைசியில் காந்தஹாரில் தரையிறங்கியது. அப்போது ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் இருந்தது. முறையான அரசு இல்லை.

3 முக்கியமான தீவிரவாதிகளை விடுவித்தால் விமானத்தையும் பயணிகளையும் பத்திரமாக விடுவிப்பதாக தலிபான்கள் நிபந்தனை விதித்தனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு, தலிபான்கள் கோரிய 3 தீவிரவாதிகளை விடுவித்தது.

விமானக் கடத்தலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், இந்திய அரசைப் பணிய வைப்பதற்காக 25 வயதான ரூபின் கத்யால் என்ற பயணியை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். கத்யாலை கத்தியால் குத்தியும், சுட்டும் கொன்ற தீவிரவாதிதான் மிஸ்திரி ஸஹூர் இப்ராகிம். இவர் கராச்சியில் வசித்து வந்தார். அங்கு பர்னிச்சர் நிறுவனம் ஒன்றையும் கண் துடைப்புக்காக நடத்தி வந்தார்.

8 வயது ஆலிஸ்.. நடுத் தெருவில்.. கண்ணீர் விட்ட உக்ரைன் அதிபரின் மனைவி!

ஜெய்ஷ் இ முகம்மது
தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் இப்ராகிம். மார்ச் 1ம் தேதி இவர் கராச்சியின் அக்தர் காலனி பகுதியில் அடையாளம் தெரியாத சிலரால் 2 முறை தலையில் சுடப்பட்டார். படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இப்ராகிம் தற்போது உயிரிழந்து விட்டார். இப்ராகிம் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தற்போதுதான் வெளியில் வந்துள்ளது. அவரை சுட்டுக் கொன்ற கும்பல் யார் என்பது தெரியவில்லை.

இப்ராகிமின் இறுதிச் சடங்கில் ஜெய்ஷ் இ முகம்மது நிறுவனரான தீவிரவாதி மசூத் அஸாரின் தம்பியும், அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான ராஃப் அஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனராம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.