பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் தலைமை சிறை கண்காணிப்பாளர் பி.ரங்கநாத் நேற்று கூறியதாவது: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகள் மற்றும் சிறை காவலர்களுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்தும் நோக்கில் கிரிக்கெட் போட்டி நடத்த முடிவெடுத்தோம். கைதிகளிடையே தீய சிந்தனையை போக்கி நற்சிந்தனையை விதைக்கும் நோக்கில் இதற்கு ஏற்பாடு செய்தேன். கைதிகளை 4 அணிகளாகவும், காவலர்களை 2 அணிகளாவும் பிரித்து ஒரு வாரம் பயிற்சி அளித்து நட்பு ரீதியான போட்டிக்கு தயார் படுத்தினோம்.
விளையாட முடியாத குற்றவாளிகளுக்கு அணியை உற்சாகப்படுத்தும் ‘சியர் குரூப்’ பணி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 போட்டிகள் நடத்தப்பட்டன. கைதிகளுக்கும் காவலர்களுக்கும் வெவ்வேறு வண்ணத்தில் உடைகள் வழங்கப்பட்டன. அனைத்துப் போட்டிகளிலும் சிறை காவலர்கள் அணியே வெற்றி பெற்றது. இருப்பினும் கைதிகள் சிறப்பான முறையில் திறமையை வெளிப்படுத்தியதால் பரிசுகள் வழங்கப்பட்டன.
கிரிக்கெட் போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை கைப்பந்து போட்டி நடத்த இருக்கிறோம். சிறை வளாகத்தில் பிரிண்டிங், சமையல், ஹேர் ஸ்டைலிங் ஆகியவை கற்றுத்தர முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பி.ரங்கநாத் தெரிவித்தார்.