பனாஜி: கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் காங்கிரஸை தொடர்ந்து ஆம் ஆத்மியும் தனது வேட்பாளர்களை பாதுகாப்பாக வைத்துள்ளது.
கோவா சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகவும் தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆளும் பாஜகவும் காங்கிரஸும் சமமான இடங்களை பெறக்கூடும்.
எனினும் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்படக்கூடும் என்றுதெரிகிறது. அதேநேரம் இதர கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பெரும்பான்மை இல்லாத சூழலில் மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இதுபோலவே காங்கிரஸ் கட்சியும் அங்கு ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற பிறகும் ஆட்சி அமைக்க முடியாமல் போன 2017-ம் ஆண்டு போன்ற சூழலைத் தவிர்க்க காங்கிரஸ் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
இதன் ஒருபகுதியாக நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரையும் பாதுகாக்கும் பொருட்டு அவர்கள் அனைவரும் வடக்கு கோவாவில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.நாளை மார்ச் 10 (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகும் வரை அவர்கள் அனைவரும்அங்கு தங்கியிருப்பார்கள் எனத் தெரிகிறது.
காங்கிரஸை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியும் தனது வேட்பாளர்களை பாதுகாப்பாக வெவ்வேறு இடங்களில் தங்க வைத்துள்ளது. ஆம் ஆத்மி பெரிய அளவில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றாலும் கூட ஒரு சில எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றாலும் அவர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவும், காங்கிரஸும் முயற்சி மேற்கொண்டுள்ளன. இதனால் தங்கள் வேட்பாளர்களை பாதுகாப்பாக வைக்கும் நடவடிக்கையை ஆம் ஆத்மி எடுத்துள்ளது.
கருத்துக் கணிப்புகள் சில, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுக்கு மூன்று இடங்கள் கிடைக்கும் எனக் கூறியுள்ளன. இதனால் திரிணமூல் காங்கிரஸ் கிங் மேக்கராகக் கூடும் எனக் கூறப்படுகிறது.
இதனால் திரிணமூல் காங்கிரஸ் உட்பட பிற கட்சிகளும் வெற்றிபெறும் தங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.