ஆம்ஸ்டர்டாம்:
ரஷிய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு மீது ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றபோது, ரஷியா புறக்கணித்தது. உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார். அப்போது, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். ரஷ்யா தடுத்து நிறுத்தப்பட வேண்டும், தடுத்து நிறுத்துவதில் நீதிமன்றத்தின் பங்கு உள்ளது என்றும் அவர் நீதிபதிகளிடம் கூறினார்.
இந்நிலையில், விசாரணையை புறக்கணித்தது குறித்து ரஷியா தரப்பில் முதல் முறையாக வெளிப்படையாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இது பொருத்தமில்லாத அபத்தமான வழக்கு என்பதால் விசாரணையில் கலந்து கொள்ளவில்லை’ என ரஷிய வெளியுறவுத்துறை டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
இனப்படுகொலையைத் தடுப்பதற்காகவே தாக்குதல் நடத்துவதாக தவறாகக் கூறி ரஷியா தனது படையெடுப்பை நியாயப்படுத்த முயற்சித்ததாக உக்ரைன் தரப்பில் வாதிடப்பட்டது.