புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினமான நேற்று, நாட்டின் தலைசிறந்த 29 பெண்களுக்கு பெண் சக்தி விருதுகளை (நாரி சக்தி புரஸ்கார்) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் பெண்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும் பெண்சக்தி விருது (நாரி சக்தி புரஸ்கார்) வழங்கப்படுகிறது. தொழில்முனைவு, வேளாண்மை, சமூகப் பணி, கல்வி, இலக்கியம், மொழியியல், கலைகள், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், ஊனமுற்றோர் உரிமைகள், வனவிலங்குகள் பாதுகாப்பு என பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருது வழங்கும் விழா, சர்வதேச மகளிர் தினமான நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் நாட்டின் தலைசிறந்த 29 பெண்களுக்கு பெண் சக்தி விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
சமூக தொழில்முனைவாளர் அனிதா குப்தா, இயற்கை விவசாயியும் பழங்குடியின செயற்பாட்டாளருமான உஷா பென் தினேஷ்பாய் வாசவா, கண்டுபிடிப்பாளர் நசிரா அக்தர், இன்டெல் -இண்டியா நிறுவன தலைமை நிர்வாகி நிவ்ருதி ராய், மாற்றுத்திறளாளி கதக் நடனக் கலைஞர் சைலி நந்தகிஷோர், கணிதவியல் அறிஞர் நீனா குப்தா உள்ளிட்டோர் இவ்விருதை பெற்றுக்கொண்டனர்.
சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி, பெண் சக்தி விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது அவர், “உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பது போன்ற அரசாங்க முயற்சிகளின் வெற்றி பெண்களின் பங்களிப்பை சார்ந்தது. அனைத்து பெண்களும் குடும்ப அளவில் முடிவுகள் எடுப்பதில் பங்கு வகிப்பதை உறுதி செய்வது அவசியம்” என்றார். – பிடிஐ
3 தமிழக பெண்களுக்கு விருது
தமிழகத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கும் பெண் சக்தி விருது வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தோடா எம்பிராய்டரி கைவினைஞர்களான ஜெயமுத்து, தேஜம்மா ஆகிய இருவருக்கும் 2020-ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருது வழங்கப்பட்டது. மனநல மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான தாரா ரங்கசாமிக்கு 2021-ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருது வழங்கப்பட்டது.
ஜெயமுத்து, தேஜம்மா ஆகிய இருவரும் பள்ளி நாட்களில் இருந்து தோடா எம்பிராய்டரி கொண்ட சால்வைகள் மற்றும் ஆடைகளை உருவாக்கி வருகின்றனர். டாக்டர் தாரா ரங்கசாமி, சென்னையில் உள்ள ஸ்கிசோப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ஸ்கார்ப்) இணை நிறுவனர் மற்றும் துணைத் தலைவராக உள்ளார்.