நடிகர் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் நாளை (மார்ச் 10) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ‘ஜெய்பீம்’ பட விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்காத வரை எந்த திரையரங்களிலும் சூர்யாவின் படத்தை வெளியிடக் கூடாது என்று வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், வட மாவட்டங்களில் படம் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் சூர்யா நடித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது, பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு போலீஸ் சித்ரவதையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாதாடி நீதியைப் பெற்றுத் தந்தார். இந்த உண்மை சம்பவத்தை கருவாக எடுத்துக்கொண்டு சினிமாவாக புணையப்பட்ட ‘ஜெய்பீம்’ திரைப்படம், நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி சர்ச்சையையும் வரவேற்பையும் ஒரு சேர சந்தித்தது. ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி இருந்தார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. சூர்யா வழக்கறிஞர் சந்துரு வேடத்தில் நடித்திருந்தார்.
‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணுவை சித்திரவைதை செய்து கொலை செய்யும் எஸ்.ஐ. கதாபாத்திரம், வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். பதிலுக்கு நடிகர் சூர்யாவும் அறிக்கை வெளியிட்டார். பிறகு, இயக்குனர் த.செ.ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். ஆனாலும், ‘ஜெய்பீம்’ படத்தில் நடித்த நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் அவர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அப்போது அவருக்கு சமூக ஊடகங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில்தான், நடிகர் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் நாளை (மார்ச் 10) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ‘ஜெய்பீம்’ பட விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்காத வரை எந்த திரையரங்களிலும் அவருடைய படத்தை வெளியிடக் கூடாது என்று வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள வட மாவட்டங்களில் படம் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, அரியலூர் மாவட்ட வன்னியர்சங்க செயலாளர் கே.எம். தங்கராசு அரியலூர் மாவட்ட, திரையரங்கு உரிமையளர்கள் சங்கத்தினருக்கு கடிதம் ஒன்று வன்னிஅர் சங்கம் சார்பில் அளித்துள்ளார். அதில், ‘ஜெய்பீம்’ பட விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்காத வரை எந்த திரையரங்களிலும் சூர்யாவின் படத்தை வெளியிடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தில் அரியலூர் மாவட்ட வன்னியர்சங்க செயலாளர் கே.எம். தங்கராசு கூறியிருப்பதாவது: “திரைப்பட நடிகர் சூர்யா கடந்த 2021 நவம்பர் 02ம் தேதியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் டி.செ.ஞானவேல் இயக்கிய இப்படத்தை (2D Entertainment) நிறுவனம் தயாரித்ட்து நடிகர் சூர்யா நடித்துள்ளார். இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க, எஸ்.ஐ அந்தோணிசாமி என்ற் தலித் கிருத்துவர் மட்டும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தை வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளராக நடித்தவர் ஒரு ஜாதி வெறியர் போல சித்தரித்து வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசத்தை அவர் வீடில் காட்சிப்படுத்தி கவல் உதவி ஆய்வாளரை வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்றும் ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்கள் ஜாதி வன்மம் உள்ளவர்கள் போல காட்டியுள்ளனர். சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சப்படுத்தும் விதமாகவும் வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை அவர் வன்னியர் மக்கள்டம் பொது மன்னிப்பு கேட்காதவரை அரியலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்க கூடாது என வன்னியர் சங்கம் சார்பாகவும் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்” என்று அரியலூர் மாவட்ட வன்னியர்சங்க செயலாளர் கே.எம். தங்கராசு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ஜெயங்கொண்டத்தில் உள்ள ஜனகர் திரையரங்குக்கு நேரில் சென்று உரிமையாளிடம் கடிதம் அளித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், கடலூர் மாவட்டத்திலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில், ஜெய்பீம் பட விவகாரத்தையொட்டி வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், வட மாவட்டங்களில் படம் ரீலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“