கீவ்: தனது செல்லப் பிராணிகளான 2 சிறுத்தைகளை அழைத்துச்செல்ல அனுமதித்தால் மட்டுமே உக்ரைனிலிருந்து தாயகம் திரும்புவேன் என இந்திய மருத்துவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.இந்திய மருத்துவரான கிரிகுமார் பாட்டீல் டான்பாஸ்பகுதிக்குட்பட்ட செவரோடோ னெட்ஸ்க் நகரில் வசித்து வருகிறார். ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அப்பகுதியில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் பாட்டீல் தனது வீட்டின் தரைகீழ் தளத்தில் தங்கி உள்ளார். ஆனால் தனது செல்லப்பிராணிகளான 2 சிறுத்தைகளையும் அழைத்துச் செல்ல அனுமதித்தால் மட்டுமே தாயகம் திரும்புவேன் என தெரிவி்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என் குடும்பத்தினர் தாயகம் திரும்புமாறு என்னை வலியுறுத்துகின்றனர். என்னுடைய செல்லப் பிராணிகளை குழந்தை களைப் போல கருதுகிறேன். என்உயிரை காப்பதற்காக எனது செல்லப் பிராணிகளை ஒருபோதும் கைவிட மாட்டேன். எனது கடைசி மூச்சு உள்ளவரை அவற்றை பாதுகாப்பதுடன் அவற்றுடன் தங்கி இருப்பேன். எனதுசெல்லப் பிராணிகளை அழைத்துச் செல்ல இந்திய அரசு அனுமதிக்கும் என நம்புகிறேன்” என்றார்.
ஆந்திராவைச் சேர்ந்த பாட்டீல், கடந்த 2007-ம் ஆண்டு மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் சென்றார். படிப்பை முடித்த பிறகுஅவருக்கு அங்கேயே அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்தது. இதனால் அங்கேயே அவர் தங்கிவிட்டார். இவர் 2 சிறுத்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.