ஜம்மு: ஜம்முவில் மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15 பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்ற வளாகத்துக்கு அருகே நேற்று பிற்பகல் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. காய்கறி, பழங்களை வண்டியில் வைத்து விற்பனை செய்யும் இடத்தில் குண்டு வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 8 மாத குழந்தை, பெண் உட்பட 15 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது டிவிட்டர் பதிவில், ‘குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். 13 பேர் காயமடைந்துள்ளனர். காவல்துறை துணை ஆணையருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றேன். குண்டு வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விசாரணை நடந்து வருகின்றது,’ என்று குறிப்பிட்டுள்ளார்.