தமிழக அரசிடம் தொலைநோக்குத் திட்டங்கள் எதுவுமில்லாமல் தான், டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்தி உள்ளதாக, பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவித்ததாவது, “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி இதுவரை மேகதாது அணை விவகாரம் பற்றி வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய திமுக, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் போக்கை இதுவரை கண்டிக்க கூட இல்லை. இது தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசாத தமிழகத்தில் ஒரு முதலமைச்சர் இருக்கிறார் என்றால், அது தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆக தான் இருப்பார்.
கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கும், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் ரகசிய உறவு இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. இதனை திமுக ஆமோதிக்கிறதா? என்ற கேள்வி எழுப்ப வேண்டும்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் வழங்காத பல நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி வழங்கியுள்ளார்.
தற்போதைய தமிழக அரசிடம் எந்த ஒரு தொலைநோக்கு திட்டமும் இல்லை. இதன் காரணமாகத்தான் டாஸ்மாக்கை கடைசியாக நம்பி மதுபானங்களின் விலையை உயர்த்தி, அரசுக்கு அரசுக்கு 2000 கோடி கூடுதல் வருவாய் ஈட்டிக் கொள்ள முயற்சி செய்துள்ளனர்.
டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அரசை நடத்தி விடலாம் என்று நம்பிக் கொண்டு இருக்கிறது தமிழக அரசு. இதுதான் ‘திராவிட மாடல் வளர்ச்சியா?’ தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொய்கை மட்டுமே கூறிக் கொண்டு ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்” என்று அண்ணாமலை கடுமையாக தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.