அகர்தலா: திரிபுராவில் அரசு வேலைவாய்ப் பில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜக மற்றும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி அரசு பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி தலைநகர் அகர்தலாவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: திரிபுராவில் அரசியல் வன் முறைக்கு விப்லவ் தேவ் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தற்போதைய அரசின் ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது.
தனிநபர் வருமானம் ரூ.1.3 லட்சமாக உயர்ந்துள்ளது. ரயில் போக்குவரத்து மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் அகர்தலா இணைக்கப்பட்டுள்ளது.
இம்மாநிலத்தில் 542 கி.மீ.தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திரிபுராவில் கடும் குற்ற வழக்குகள் 30 சதவீதம் குறைந்துள்ளன. தண்டனை வழங்கப்பட்ட வழக்குகள் விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்ந்துள்ளது. திரிபுராவில் அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
சர்வதேச மகளிர் தினத்தில் இதனை அறிவிக்கிறேன். முந் தைய தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் இந்த அரசு நிறை வேற்றும். வாக்கு கேட்டு திரிபுராவுக்கு நான் மீண்டும் வருவேன். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
திரிபுராவில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற வாய்ப்புள்ளது.