திருவண்ணாமலை: மின்சாரம் பாய்ச்சி இளைஞரைக் கொல்ல முயற்சி; காப்பாற்ற வந்தவர் உட்பட இருவர் பலி!

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ளது சொரகொளத்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ்(26) என்பவருக்கும், ஏழுமலை(45) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு தனது நிலத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் கட்டில் மீது படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார் சரண்ராஜ். நள்ளிரவில் அங்கு வந்த ஏழுமலை, அருகில் உள்ள மின் கம்பத்தில் மின் ஒயரை மாட்டி எடுத்துவந்து, தூங்கிக் கொண்டிருந்த சரண்ராஜ் மீது மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றுள்ளார். அப்போது திடீரென விழித்த சரண்ராஜ், அவரை தள்ளிவிட்டு சத்தம் போட்டுள்ளார்.

மின்சாரம்

இதனால், அருகில் இருந்த வீட்டிலிருந்து பதட்டத்துடன் ஓடி வந்த வேணுகோபால் என்பவர், ஏழுமலை கையில் வைத்திருந்த மின்சார ஒயரை கவனிக்காமல் அவரை பிடித்து தடுத்துள்ளார். அப்போது வேணுகோபால், ஏழுமலை ஆகிய இருவருமே சம்பவ இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வட்டாரத்தில் விசாரித்தோம். “சரண்ராஜூம், ஏழுமலையும் அவர்களுடைய தாத்தா வழி உறவு முறையில் பங்காளிகள். இவ்விரு குடும்பத்தாருக்கும் இடையே பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன் இந்த நிலப் பிரச்னை தொடர்பாக இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் எந்தவித பிரச்னையும் இல்லாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், திடீரென நேற்றிரவு சரண்ராஜ் உறங்கிக்கொண்டிருந்த இடத்திற்கு சென்ற ஏழுமலை, சரண்ராஜ் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

உயிரிழப்பு

அப்போது சரண்ராஜ் கூச்சலிடவே ஏதுமறியாமல் வேணுகோபால் என்பவர் ஓடிவந்து ஏழுமலையை தடுத்துள்ளார். அப்போது ஏழுமலை, வேணுகோபால் ஆகிய இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளனர்” என்றனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கலசப்பாக்கம் காவல்துறையினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.