கீவ்,
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 14-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கிடையே இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.
இந்நிலையில், நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்த்துக்கொள்ள அழுத்தம் கொடுக்கப்போவதில்லை என அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “உக்ரைனை நேட்டோவில் இணைத்துக்கொள்ள அந்த அமைப்பில் உள்ள நாடுகள் முனைப்பு காட்டவில்லை என தோன்றுகிறது. ரஷியாவுடனான போர் மற்றும் சர்ச்சைகளைக் கருத்தில் கொண்டே நேட்டோ அமைப்பு உக்ரைனை படையில் சேர்த்துக் கொள்ள அஞ்சுகிறது.
எதையும் காலில் விழுந்து கெஞ்சிப் பெறும் நாடாக உக்ரைன் இருக்கக் கூடாது. எனக்கு வாக்களித்த மக்கள் சரணடைய தயாராக இல்லை.
ரஷியாவால் சுதந்திரமான பகுதிகள் என அறிவிக்கப்பட்ட உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா மற்றும் டான்பாஸின் எதிர்காலம் குறித்து ரஷ்யாவுடன் விவாதிப்போம். பேச்சுவார்த்தையில் அதிபர் புதின் நேரடியாக கலந்து கொள்ள முன் வர வேண்டும். புதிதாக அங்கீகரிக்கப்பட்ட குடியரசுகள் போலியான குடியரசுகள். அங்கு வாழும் உக்ரைன் மக்கள் உக்ரைனுடன் சேரவே விரும்புகின்றனர்.”
இவ்வாறு அவர் கூறினார்.
சோவியத் யூனியனிலிருந்து ஐரோப்பாவைப் பாதுகாக்க பனிப்போரின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட அட்லாண்டிக் கூட்டமைப்பே நேட்டோ ஆகும்.காலப்போக்கில் நேட்டோ அமைப்பு கிழக்கு நாடுகளை தன் கூட்டமைப்பில் சேர்த்துக்கொண்டது. இதன் காரணமக நேட்டோ விரிவாக்கத்தை ஒரு அச்சுறுத்தலாக ரஷியா பார்க்கிறது.
போர் நிறுத்தம் ஏற்பட வேண்டுமெனில் அந்த அமைப்பில் உக்ரைன் சேர கூடாது என்பதை நிபந்தனையாக ரஷியா தொடர்ந்து முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.