தற்போது நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
எரிபொருள், சமையல் எரிவாயு பிரச்சினை பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது. நீண்டகால பொருளாதார கொள்கை வகுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாமையே இதற்கான காரணம் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் மீதான தாக்குதல் மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர நடத்திய ஆர்ப்பாட்டம் முதலானவை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்,
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் மீது முட்டை தாக்குதல் நடந்திருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தனிப்பட்ட ரீதியில் தான் கவலை தெரிவிப்பதாக கூறினார்.
இவ்வாறான தாக்குதல்களை அனுமதிக்க முடியாதென்றும் கம்பஹாவில் நடந்த முட்டை தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்றம் பிரதிவாதிகளை விளக்கமறியலில் வைத்துள்ளது. விசாரணை நடைபெறாதென கூறப்பட்டது. ஆனால் தவறை தவறென்றும் சரியானதை சரியென்றும் குறிப்பிட நாம் தயங்க மாட்டோம்.
ஆர்ப்பாட்டம் செய்யும் ஜனநாயக உரிமையை அடுத்தவரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஆர்ப்பாட்டம் செய்வதற்காக ஐனாதிபதி தனியான இடம் ஒதுக்கினார். ஐனாதிபதி செயலகத்திற்கருகில் அவர் இடம் வழங்கினார். கடந்த காலத்தில் ஆர்ப்பாட்டம் செய்வோர் தாக்கப்பட்டனர். தற்காலத்தில் அவ்வாறு நடக்கவில்லை. ஹிருணிகா ஆர்ப்பாட்டம் நடத்த வருவதை புலனாய்வு பிரிவு அறிந்திருக்கவில்லையென்பதை ஏற்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு நீண்டகால கொள்கைகளை வகுப்பதற்கு ஜனாதிபதி பொருளாதார சபையொன்றை அமைத்திருப்பதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.