பெங்களூரில் போதைப் பொருட்களை விற்பனை செய்த காதல் ஜோடி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் 4-வது மெயின் ரோடு, அரகா கிராமத்தில் ஒரு நபர் போதைப்பொருள் விற்பனை செய்ய முயற்சிப்பதாக ஹூலிமாவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றிய நபரை பிடித்து சோதனை நடத்தியபோது அவரிடம் கியாசிஸ் ஆயில் என்ற போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மடிவாளா மாருதி நகரைச் சேர்ந்த விக்ரம் என்ற விக்கி (23) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில், போதைப் பொருட்கள் விற்பனைக்கு பின்னால் 2 பேர் இருப்பதாக தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கேரளாவைச் சேர்ந்த சிகில் வர்கீஸ் (23), அவரது காதலி விஷ்ணுபிரியா (22) ஆகிய 2 பேரையும் ஹூலிமாவு போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 3 பேரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பெங்களூருக்கு கியாசிஸ் ஆயிலை கடத்தி வந்துள்ளனர். அந்த போதைப்பொருளை தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கும், சிறு, சிறு வியாபாரிகளுக்கும் சிறிய பாட்டில்களில் நிரப்பி கொடுத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கைதான 3 பேரிடம் இருந்து 12 கிலோ 940 கிராம் கியாசிஸ் ஆயில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் கியாசிஸ் போதைப்பொருளின் மதிப்பு ரூ.7 கோடியே 76 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான 3 பேர் மீதும் ஹூலிமாவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM