சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகப் பணியாற்றிய கிரிஜா குமார்பாபுவுக்கு இந்த ஆண்டுக்கான அவ்வையார் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெண்களுக்கான சேவையில் சிறந்து விளங்கும் மகளிரை கவுரவிக்கும் வகையில், சமூக நலத் துறை மூலம் அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
மகளிர் அதிகாரம், மத நல்லிணக்கம், மொழி, கலை, அறிவியல்,ஊடகவியல், நிர்வாகம் ஆகியதுறைகளில் சிறந்து விளங்கியதுடன், சேவை மனப்பான்மையோடு தொண்டாற்றியவர்களைப் பாராட்டி8 கிராம் தங்கப் பதக்கம், ரூ.1 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுப் பத்திரம் அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதை, தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரிஜா குமார்பாபுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பெண்கள், குழந்தை களுக்கு இவர் ஆற்றிய சேவை களைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய குழந்தைகள்நலச் சங்கம், இளைஞர் நீதிக் குழுமம், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் குழு, மருத்துவ நெறிமுறை ஆலோசனைக் குழு ஆகிய குழுக்களில் உறுப்பினராகப் பணியாற்றியதற்காகவும், யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியமைக்காகவும், பயிற்சியாளராக பல சமூகப் பணியாளர்களை உருவாக்கியமைக்காகவும் இந்த விருது இவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
குடியரசு தின விருதுகள்
இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில், கரோனா தொற்று காரணமாக விழாவில் பங்கேற்காத விருதாளர்கள், சிவகங்கையைச் சேர்ந்த வீ.முத்துகிருஷ்ணன், திருச்சி ச.லோகித், கோவைகே.அசோகன், திருப்பூர் சி.சுதாஆகியோருக்கு வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் மற்றும்ரூ.1 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் நேற்று வழங்கினார்.
மேலும், சேலத்தைச் சேர்ந்த செ.ராமசாமிக்கு நெல் உற்பத்தித் திறனுக்கான சி.கிருஷ்ணசாமி நாயுடு விருது மற்றும் ரூ.5 லட்சத்துக்கான காசோலை, வேலூர் மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவுகாவல் ஆய்வாளர் மா.குமார், திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ச.சிதம்பரம் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கத்துக்கான சான்றிதழ் மற்றும் ரூ.40 ஆயிரத்துக்கான காசோலை ஆகியவற்றையும் முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கீதாஜீவன், சமூக நலத் துறை செயலர்ஷம்பு கல்லோலிகர், பொதுத்துறை செயலர் டி.ஜெகநாதன், துணைச்செயலர் எஸ்.அனு, சமூகநலத் துறை இயக்குநர்டி.ரத்னா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் வே.அமுதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது
2020-21-ம் ஆண்டுக்கான ‘எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர்’ விருதுகளும் நேற்று வழங்கப்பட்டன. அதன்படி கருப்பு கவுனி ரகம் சாகுபடியில் அதிக மகசூல் செய்து மாநில அளவில் முதலிடம் பெற்ற நாமக்கல்லைச் சேர்ந்த செ.மூர்த்திக்கு விருதுடன் பரிசுத் தொகையாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும், வாசனை சீரக சம்பா சாகுபடியில் அதிக மகசூல் செய்து 2-ம் இடம் பெற்ற திருநெல்வேலியைச் சேர்ந்த கோ.பொன்னு புதியவனுக்கு விருதுடன்பரிசுத்தொகை ரூ.75 ஆயிரத்துக்கான காசோலையையும், ஆத்தூர் கிச்சிலி சம்பா சாகுபடியில் அதிக மகசூல் செய்து 3-ம் இடம் பெற்றதிருநெல்வேலியைச் சேர்ந்த பி.லட்சுமி தேவிக்கு விருதுடன் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், வேளாண்துறை செயலர் சி.சமயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.