சென்னை: “பேரறிவாளன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது“ என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிவாளன் எந்தத் தவறும் செய்யாதவர். ராஜீவ் காந்தி படுகொலைக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எந்தக் குற்றமும் செய்யாமல், முப்பதாண்டுகள் இளமை வாழ்க்கையை சிறையில் கழிக்க வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது.
தொடக்க காலத்தில் அவர் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டார். அவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு இருந்தார். பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பது தான் அவர் மீதான அதிகபட்ச குற்றச்சாட்டு. கடைசியில் உண்மை வெளிவந்தும் பயன் ஒன்றும் இல்லை.
இழந்த முப்பதாண்டுகளைத் திரும்பப் பெற முடியுமா, இழந்த முப்பதாண்டுகளைப் பெறுவதற்கு பேரறிவாளனுக்கு வாய்ப்பு உண்டா, இல்லையே. நீதி சாகடிக்கப்பட்டு நீண்டகாலம் ஆயிற்று.
இப்பொழுது அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. இந்த விடுதலை அவரது தாய், தந்தை உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் ஆறுதலாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்