நியூயார்க்: போரை உடனடியாக நிறுத்த ரஷ்யா, உக்ரைன் அதிபர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருக்கிறார் என்று ஐ.நா.சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய தூதர் திருமூர்த்தி பேசியதாவது: உக்ரைன் போரினால் அப்பாவிபொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மாணவர் உட்படஇதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்திவிட்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்கியுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
உக்ரைனின் சுமி உள்ளிட்ட நகரங்களில் இருந்து இந்திர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. போர்க்களத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேறபாதுகாப்பான வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பான ஐ.நா. பொதுச்செயலாளரின் ஆலோசனையை இந்தியா வரவேற்கிறது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் சர்வதேச சமூகம் உதவ வேண்டும். மனிதாபிமானம், நடுநிலைமை கொள்கைகளை அரசியலாக்கக்கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.
– பிடிஐ