பாரினில் பெண்கள் ஆள வந்தோம் என்று உற்சாகமாக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பல்வேறு துறைகளில் இன்று பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்.
சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.வீட்டின் சமையல் கூடங்களில் சிறைப்பட்டிருக்கும் பெண்கள் நேற்று தங்கள் வலிமையை உணர்ந்து உற்சாகமாகக் கொண்டாடினர்.
பிரான்சிடமிருந்து இந்தியா வாங்கிய ரபேல் போர் விமானத்தின் விமானியாக ஷிவானி சிங் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்களைப் போலவே தானும் பயிற்சி பெற்றதாகவும், இயந்திரங்களுக்கு பாலின வேறுபாடுதெரியாது என்றும் ஷிவானிசிங் குறிப்பிட்டார்.
கிழக்கு கடலோர ரயில்வே சார்பில் முழுவதும் பெண்களே இயக்கும் ரயில் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகாடா வரை சென்றது. இந்த ரயிலில் டிக்கட் பரிசோதகர் முதல் ரயில் ஓட்டுனர் வரை அனைவரும் பெண்களே.
இந்த ஆண்டு முதல் கடற்படையில் பெண்களுக்கான இடம் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியப் போர்க்கப்பலான விக்ரமாதித்யாவில் கமாண்டர் பிரியங்கா சவுத்திரி பணியாற்றி வருகிறார்.
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் மகளிர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஜம்முவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மகளிர் தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது
இதே போன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு முதல் பெண் ஓட்டுனர் தீபாமோள் சர்வதேச பெண்கள் தினத்தில் பணியில் சேர்ந்தார். தமது கனவுகள் நனவானதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்
இதனிடையே கொல்கத்தாவில் சிவப்பு விளக்குப் பகுதியில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் தர்பார் கமிட்டி என்ற தொண்டு நிறுவனம் மகளிர் தினத்தைக் கொண்டாடியது