பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுத்துறை நிறுவனங்களின் வசம் உள்ள உபரி நிலங்கள் மற்றும் உபயோகத்தில் இல்லாத கட்டடங்களைப் பணமாக்குவது தொடர்பாக ஓர் அமைப்பை உருவாக்குவது குறித்த முக்கிய முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்த அமைப்பு, `தேசிய நில பணமாக்கல் கழகம் (என்.எல்.எம்.சி)’ என்றழைக்கப்டுகிறது. இதன் மூலம், பொதுத்துறை நிறுவனங்களின் வசம் உள்ள உபரி நிலங்களான காலி இடங்கள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத கட்டடங்களை விற்றல் அல்லது குத்தகைக்கு விடுதல் மூலம் பணமாக அரசுக்குக் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த அமைப்பானது, பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாகத் தனியாருக்கு விற்பது மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதைத் துரிதமாக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கு முன்பு ‘என்.எம்.பி’ எனப்படும் மத்திய அரசின் அமைப்பின் மூலம் ரயில்வே, மின்சாரம், சாலை மற்றும் போக்குவரத்துத் துறை போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களைத் தனியாருக்கு குத்தகைக்கு விட்டு அரசு வருவாய் ஈட்டி வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.