மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப்படி, மருத்துவம், பொறியியல், கலை அறிவியல், நிர்வாகவியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் உயர்கல்வி மையங்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதற்கான திருத்தங்களுடன் கூடிய வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது.
இதன்படி, மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என தனித்தனி கல்லூரிகள் இனி இருக்காது. எல்லா படிப்புகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். இதன்மூலம், ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி மையங்களில் இனி எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளும் படிக்க முடியும் என்ற நிலை ஏற்படவிருக்கிறது.
ஜேஎன்யு-வில் எம்பிபிஎஸ் படிப்பு
யுஜிசி அறிவுரைப்படி தேசிய அளவில் புகழ்பெற்ற சிவ்நாடார் பல்கலைக்கழகம், ஓபி ஜிந்தால் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்து படிப்புகளையும் வழங்கத் துவங்கிவிட்டன. புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை துவங்கிவிட்டது. மருத்துவ படிப்புகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் துவங்கி விட்டன. அனைத்து படிப்புகளையும் ஒரே இடத்தில் வழங்கும் நடைமுறை சர்வதேச அளவில் புகழ்பெற்று வருகிறது. இதற்கேற்ப இந்தியாவிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
உயர்கல்வி மையங்கள் தங்களுக்குள் கூட்டுசேர்ந்து தொகுப்பு கல்லூரிகளை உருவாக்கிக் கொண்டு ஒரே இடத்தில் அனைத்து படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி மூன்று வகை உயர்கல்வி மையங்கள் மட்டுமே இருக்கும்.
1. அனைத்து படிப்புகளுடன் கூடிய ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்கலைக்கழகங்கள்
2. அனைத்து படிப்புகளுடன் கூடிய கற்பித்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்கலைக்கழகங்கள்
3. அனைத்து பாடங்களிலும் பட்டங்கள் வழங்கும் தன்னாட்சி கல்லூரிகள்
மேலும், ஒரு மாணவர் இரண்டு கல்லூரிகளில் ஒரே நேரத்தில் படித்து இரட்டை பட்டம் பெறவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தங்களை பல்கலைக்கழகம் மற்றும் மாநில அரசின் ஒப்புதலுடன் மேற்கொண்டு இரட்டை பட்டங்களை வழங்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த மாணவர் சேர்க்கை உள்ள கல்லூரிகள் ஒன்றிணைக்கப்பட்டு தொகுப்பு கல்லூரிகளாக மாற்றப்பட உள்ளது.
தொகுப்பு கல்லூரியில் சேரும் ஒரு மாணவர் அந்த கல்லூரியில் பாதி படிப்பை முடித்துவிட்டு தொகுப்பில் உள்ள மற்றொரு கல்லூரியில் மீதி படிப்பை படிக்க முடியும். ஒவ்வொரு கல்லூரியும் தன்னாட்சி கல்லூரிகளாக மாறும் வகையில் தரத்தை உயர்த்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளாக மாற்றப்படும்.
தேசிய கல்விக் கொள்கையின்படி கொண்டு வரப்பட உள்ள இந்த மாற்றங்கள் தற்போதுள்ள உயர்கல்வி படிப்புகளுக்கான நடைமுறையை புரட்டிப் போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்களை கொண்டு வருவதற்கான வரைவு அறிக்கை மீது மார்ச் 20-ம் தேதி வரை பொதுமக்கள், கல்வியாளர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்ய > வரைவு அறிக்கை