சென்னை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது. இதனை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பதாவது:-
பேரறிவாளன் எந்தத் தவறும் செய்யாதவர். ராஜீவ்காந்தி படுகொலைக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எந்தக் குற்றமும் செய்யாமல், முப்பதாண்டுகள் இளமை வாழ்க்கையை சிறையில் கழிக்க வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது. தொடக்க காலத்தில் அவர் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டார். அவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு இருந்தார்.
பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் அவர் மீதான அதிகபட்சக் குற்றச்சாட்டு. கடைசியில் உண்மை வெளிவந்தும் பயன் ஒன்றும் இல்லை. இழந்த முப்பதாண்டுகளைத் திரும்பப் பெற முடியுமா? இழந்த முப்பதாண்டுகளைப் பெறுவதற்கு பேரறிவாளனுக்கு வாய்ப்பு உண்டா? இல்லையே? நீதி சாகடிக்கப்பட்டு நீண்டகாலம் ஆயிற்று.
இப்பொழுது அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. இந்தப் பிணை விடுதலை அவரது தாய், தந்தை உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் ஆறுதலாக இருக்கும்.
இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.
பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருப்பதை வரவேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இது அவரது முழுமையான விடுதலைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளதாகவும், இந்த வழக்கில் சிறையில் உள்ள மற்ற சிறைவாசிகளுக்கும் இதனுடைய பலன் விரைவில் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் மட்டும் இன்றி நீட் தொடர்பான வழக்கிலும்கூட இதே விதமான முரணான நிலைப்பாடுகளையே ஆளுநரும் ஒன்றிய அரசும் எடுத்து வருவது பாஜக அரசின் நோக்கத்தையும் அதன் முகவராகவே ஆளுநர் செயல்படுகிறார் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.
பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, கால்நூற்றாண்டு சட்டப் போராட்டத்தின் முக்கிய மைல் கல் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.
‘தற்போது கிடைக்கப்பெற்றிருக்கிற பிணை எனும் தற்காலிகத்தீர்விலிருந்து விடுதலை என்பதனை நோக்கி நகர்த்திச்செல்வதே முழுமையான மகிழ்ச்சியைத் தரும் நல்லறிவிப்பாகும். அதனை சாத்தியப்படுத்த தம்பி பேரறிவாளனுக்கு முழுமையாகத் துணைநிற்க வேண்டு’ என தமிழக அரசுக்கு சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேரறிவாளன் பிணை! விடுதலைக்கான விதை! என முக்குலத்தோர் புலிப்படைத்தலைவர் கருணாஸ் குறிப்பிட்டுள்ளார். “செய்யாத குற்றத்திற்கு கால்நூற்றாண்டைக் கடந்தும் கொடுஞ்சிறை அனுபவித்த பேரறிவாளனுக்கு இப்போது பிணை, விடுதலைக்கான அடுத்த நகர்வுதான்! பிணை வழங்கிய இதே நீதிமன்றம்.. குற்றமற்றவர் என்று விடுதலையும் வழங்கும்!” என்றும் கருணாஸ் கூறி உள்ளார்.
மிக நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு பேரறிவாளன் பிணையில் விடுதலையாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
‘பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை செய்யப்பட்டுவதற்கு ஆயிரமாயிரம் நியாயங்கள் உள்ளன. அவை அனைத்தையும் உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து நல்லத் தீர்ப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை பாமகவுக்கு உண்டு. அடுத்த சில வாரங்களில் பேரறிவாளனும், அவரைத் தொடர்ந்து பிற தமிழர்களும் நிரந்தரமாக விடுதலை ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதற்கு முன்பாகவே, 7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்து, அவர்களை விடுதலை செய்வதன் மூலம் தமிழக ஆளுனர் மாளிகை இந்த விஷயத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளலாம்’ என்றும் அன்புமணி தனது அறிக்கையில் கூறி உள்ளார்.