192 ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் மீண்டும் முன்பதிவில்லா பயணம் செய்யும் திட்டத்தை வரும் 10 ஆம் தேதி முதல் தெற்கு ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது.
ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 அல்லது 5 பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். கொரோனா காலத்திற்கு பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் நீக்கப்பட்டு, எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்போர் அனைவரும் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து அனைத்து ரயில்களிலும் முன்பு போல இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளை முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளாக இயக்கும்படி
ரயில்வே வாரியம்
உத்தரவிட்டு உள்ளது.
அந்த வகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் உட்பட 192 விரைவு ரயில்களில் மீண்டும்
முன்பதிவில்லா பெட்டிகள்
இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்டத்தில் இருந்து புறப்படும் யஷ்வந்த்புர் மற்றும் ஹூப்ளி விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி வரும் 10 ஆம் தேதி முதல் இயக்கப்படும். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில், முத்துநகர், உழவன் விரைவு ரயில்களில் ஏப்ரல் மாதம் 1 ஆம் முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும்.
ஏப்ரல் 16 ஆம் தேதி முதல், நெல்லை, குமரி, பாண்டியன், பொதிகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவின்றி பயணிக்கலாம். இதன் மூலம் திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 ரயில்வே கோட்டத்திலும், மொத்தமாக 192 விரைவு ரெயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. இதனால்
ரயில் பயணிகள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.