சென்னை:
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால் அங்கு சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை மீட்டு கொண்டு வருவதற்காக மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு தாய்நாடு வந்து சேர்ந்தனர்.
இதில் தமிழ்நாட்டு மாணவர்களை உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்டு கொண்டு வருவதற்காக கடந்த 23-ந்தேதியே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.பி.க்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்திருந்தார்.
இந்த குழுவில் மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், கலாநிதி வீராசாமி எம்.பி. எம்.எம்.அப்துல்லா எம்.பி. மற்றும் ஜெசிந்தா உள்ளிட்ட 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து, உக்ரைனில் சிக்கி தவித்த தமிழக மாணவர்களின் பட்டியலை வழங்கி அவர்களை மீட்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.
அதன் அடிப்படையில் உக்ரைனில் இருந்து கடந்த ஒரு வாரமாக தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வந்தனர். அவர்களை உடனுக்குடன் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்தனர்.
முன்னதாக உக்ரைனில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் எவ்வளவு பேர் தங்கி படிக்கிறார்கள் என்று கணக்கெடுக்கப்பட்டது. இதற்காக அங்குள்ளவர்கள் விவரம் தெரிவிக்க வசதியாக தூதரகத்தில் இருந்து தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரி ஆகியவை அறிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் தகவல்கள் தெரிவித்தனர். அதன்பேரில் தமிழ்நாட்டை சேர்ந்த 1,921 மாணவ-மாணவிகள் உக்ரைனில் தங்கி இருப்பது தெரிய வந்தது.
இதன்பிறகு அவர்கள் அங்கு எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கிவ், கார்கிவ் ஆகிய 2 நகரங்களில் தங்கியிருந்த பெரும்பாலான தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டனர்.
சுமி மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் ரஷியா குண்டு வீசியதன் காரணமாக அங்கு மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. அங்கு 700-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி தவித்தனர். மத்திய அரசு கேட்டுக்கொண்டதிற்கிணங்க அங்கு ரஷியாவும், உக்ரைனும் போர் நிறுத்தம் செய்தது.
அதன்பிறகு மீண்டும் அங்குள்ள மாணவர்களை பத்திரமாக மீட்கும் பணி தொடர்ந்தது. அங்கிருந்து அதன் பிறகு படிப்படியாக மாணவர்கள் மீட்கப்பட்டு இந்தியா வரவழைக்கப்பட்டனர்.
டெல்லி வரும் மாணவர்களை எம்.பி.க்கள் குழுவினர் தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்து வந்தனர்.
அதன் அடிப்படையில் உக்ரைனில் இருந்து இதுவரை 1,457 தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அரசிடம் உதவி கேட்டு அதன் அடிப்படையில் மீட்கப்பட்டவர்கள்.
இதுதவிர ஆரம்ப கட்டத்தில் உக்ரைனில் போர் ஆரம்பித்த போதே 302 தமிழக மாணவர்கள் அவர்களது சொந்த செலவில் தமிழகம் வந்துவிட்டனர்.
உக்ரைனில் மீதமுள்ள இந்திய மாணவர்களையும் பத்திரமாக மீட்பதற்கு வசதியாக போர் நிறுத்தம் செய்யப்பட்ட சுமி உள்ளிட்ட நகரங்களில் கடந்த 2 நாட்களாக போர் ஓய்ந்து இருந்தது.
இதனால் உக்ரைனில் சுமி மற்றும் சுற்றுப்புற நகரங்களில் தங்கி இருந்த மாணவர்கள் அனைவரையும் ரெயில் மற்றும் பஸ்களில் பாதுகாப்பாக எல்லைக்கு வெளியே வந்து சேருமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர்கள் ரெயில்களில் பத்திரமாக எல்லைக்கு வந்துள்ளனர்.
இதில் 57 பேர் தமிழக மாணவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் விமானம் மூலம் டெல்லிக்கு நாளை வந்து சேர உள்ளனர்.
இதேபோல் உக்ரைனில் உள்ள மற்ற நகரங்களில் உள்ள 71 பேரும் எல்லைக்கு வந்துள்ளனர். அவர்களும் இந்தியா வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனில் தொழில் நிமித்தமாக இன்னும் சிலர் உள்ளனர். அவர்கள் அங்கேயே இருப்பதாக தெரிவித்துவிட்டனர். அதில் 34 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களது சொத்து மற்றும் உடமைகளை விட்டுவிட்டு உடனே வர இயலாது என்று தெரிவித்துவிட்டனர்.
இதுபற்றி திருச்சி சிவா எம்.பி. கூறுகையில், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி தமிழக அரசிடம் உதவி கேட்ட மாணவர்கள் அனைவரையும் மீட்டு கொண்டுவந்துவிட்டோம். இறுதி கட்டமாக உக்ரைனில் தவித்த 57 மாணவர்களையும் ரெயில் மூலம் பத்திரமாக எல்லைக்கு வரவழைத்துவிட்டோம். அவர்கள் மத்திய அரசு உதவியுடன் நாளை டெல்லிக்கு வந்துவிடுவார்கள்.
டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் 57 மாணவர்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை செய்து கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைக்க உள்ளோம். உக்ரைன் நாட்டில் தவித்த அனைத்து தமிழக மாணவர்களையும் மீட்டுவிட்டோம் என்று மன நிறைவு ஏற்பட்டுள்ளது.