உத்தரப் பிரதேச அரசியலில் காந்தி குடும்பத்தின் முக்கியத்துவம் குறைந்து விட்டதா.. அவர்களது செல்வாக்கு போய் விட்டதா என்ற பெரும் கேள்விகள் எழுகின்றன. உத்தரப் பிரதேச எக்ஸிட் போல் முடிவுகளைப் பார்த்தால் அந்த கேள்விதான் வருகிறது.
காங்கிரஸ்
கட்சியைப் பொறுத்தவரை நேரு குடும்பத்து வாரிசுகள்தான் தொடர்ந்து தலைமைப் பதவியில் இருந்து வருகின்றனர். ராஜீவ் காந்தி மறைவுக்குப் பின்னர், சிறு இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர் சோனியா காந்தி. அவரைத் தொடர்ந்து
ராகுல் காந்தி
தலைவரானார். இப்போது மீண்டும் சோனியா காந்தியே தற்காலிக தலைவராக இருக்கிறார். பிரியங்கா காந்தியை உத்தரப் பிரதேச அரசியலில் களம் இறக்கியுள்ளனர்.
இந்த மூன்று பேரில் சோனியா காந்திதான் சிறந்த தலைவராக திகழ்ந்தவர். அவர் தலைவராக இருந்த காலகட்டத்தில் காங்கிரஸும் சரி, கூட்டணியும் சரி மிகவும் வலுவாக இருந்தது. பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பல்வேறு சீனியர்களையும் அழகாக ஒருங்கிணைத்து அவர்களை சரியாகப் பயன்படுத்தி கட்சியையும், கூட்டணிக் கட்சிகளையும் தெளிவாக கொண்டு சென்றவர் சோனியா காந்தி.
சோனியா காந்திக்கு உடல் நலம் குன்றி, அவரிடமிருந்து ராகுல் காந்திக்கு தலைமைப் பொறுப்பு வந்தபோது பாஜகவினர் வலுவடைந்திருந்தனர். அவர்களது டிரோல்களை சமாளிக்கவே ராகுல் காந்திக்கு நேரம் போதவில்லை. ஆனாலும் அதையும் மீறி அவர் சிறப்பாகவே செயல்பட முயன்றார். ஆனால் தொடர்ந்து கிடைத்த தேர்தல் தோல்விகளால் அவரது தலைமைப் பொறுப்பு கேள்விக்குள்ளானது. இதனால் அவர் தலைமைப் பதவியிலிருந்து அகன்றார். இதையடுத்து வேறு வழியில்லாமல் சோனியா காந்தியே இடைக்கால தலைவராக நீடித்து வருகிறார்.
இந்த நிலையில் உத்தரப் பிரதேச தேர்தலில் ராகுல் காந்திக்குப் பதில் பிரியங்காவை களம் இறக்கியது காங்கிரஸ் தலைமை. ராகுல் காந்தியால் உ.பியில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதால்
பிரியங்கா காந்தி
களம் இறக்கப்பட்டார். அவரை உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக அறிவித்து தேர்தல் பொறுப்புகளையும் கையில் கொடுத்தனர். பிரியங்கா காந்தியும் இதை சவாலாக எடுத்துக் கொண்டு மாநிலம் முழுக்க புயல் போல சுற்றிச் சுற்றி வந்தார். கிடைத்த எந்தப் பிரச்சினையையும் அவர் விடவில்லை. ஒவ்வொரு பிரச்சினையிலும் அவர் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
தேர்தல் பிரசாரங்களில் அவர் போகுமிடமெல்லாம் மிகப் பெரிய கூட்டம் கூடியது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரியங்கா காந்தி செயல்பட்டதால் பெண்களின் ஆதரவு காங்கிரஸுக்கு பெருமளவில் கிடைக்கும் என்றும் நம்பப்பட்டது. அதற்கேற்ப தேர்தல் சீட் ஒதுக்கீட்டிலும் பெண்களுக்கு 40 சதவீதம் ஒதுக்கினார் பிரியங்கா. இந்த நிலையில் நேற்று வெளியான எக்ஸிட் போல் முடிவுகளில் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள இடங்கள் பெரும் ஏமாற்றத்தைத் தருவதாக உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாடியுடன் கூட்டணி வைத்து 114 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால் வெற்றி என்னவோ 8 இடங்களில்தான். ஆனால் இந்த முறை காங்கிரஸை யாரும் தேடவே இல்லை, தேவைப்படவும் இல்லை. இதனால் வேறு வழியில்லாமல் தனித்துப் போட்டியிட்டது அக்கட்சி. பிரியங்காவின் செல்வாக்கு, காந்தி குடும்பத்தின் மீது உ.பி. வைத்திருக்கும் பாசம், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் என பல அம்சங்கள் இந்தத் தேர்தலில் அடங்கியுள்ளன. ஆனால் எக்ஸிட் போலிலோ, காங்கிரஸுக்கு 6 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்று கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.
அனைத்து எக்ஸிட் போல்களுமே காங்கிரஸுக்கு மிக மிக குறைவான இடங்களையே கணித்துள்ளன. இதுதான் ஆச்சரியமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்த பெரும் கேள்விகளையும் இது எழுப்பியுள்ளது. பிரியங்கா காந்தியின் மேஜிக்கையும் உ.பி. மக்கள் ஏற்கவில்லையா என்ற கேள்வியும் எழுப்புகிறது. நிஜமான தேர்தல் முடிவுகள் வெளியாகும்போதுதான் காங்கிரஸ் கட்சி மீதான உண்மையான தீர்ப்பை நாம் அறிய முடியும் என்றாலும் கூட எல்லா எக்ஸிட் போல்களும் கூறுவதைப் பார்க்கும்போது உ.பியில் காங்கிரஸ் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகவே தோன்றுகிறது.
சோனியா காந்தியும் பலமிழந்த நிலையில் இருக்கிறார். ராகுல் காந்தியையும் உபி. நம்பவில்லை. அமேதியில் அதைப் பார்த்தோம். இப்போது பிரியங்கா காந்தியும் தேர்தலில் தோல்விமுகத்தை சந்தித்தால் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் அது மறக்க முடியாத பக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.